Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

வெள்ளிவிழா ஆண்டில் வெற்றிகரமாக “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” விமானசேவை!!

திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து, இன்று கால் நூற்றாண்டிற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று வந்தவர்கள் அவ்வளவு எளிதாக இந்த விமானசேவையை மறந்திருக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் ஒருமுறையாவது இந்த விமானத்தில் பயணித்திருப்பர். அன்றைய தமிழர்களின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தில் பின்னிப் பிணைந்த விமானசேவை இது.

Advertisement

இந்த விமானசேவையானது 3/12/2020-ல் வெற்றிகரமாக வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இதே 3/12/1996ல் தொடங்கப்பட்டதுதான் இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” நேரடி விமானசேவை.

ஊருக்கே கிளை பரப்பி, விழுது ஊன்றி, நிழல் தரும் ஆல விருட்சமானது ஒரு சிறிய விதையில் இருந்து தொடங்குவதுபோல கால் நூற்றாண்டிற்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” நேரடி விமானசேவையானது பல நேர்மறை விளைவுகளை இந்திய விமானத்துறையில் ஏற்படுத்தியுள்ளது.

???? இந்தியாவில் பெருநகரங்கள் (மெட்ரோ), கேரளா தவிர்த்த இரண்டாம்நாலை நகரங்களில் இருந்து தொடங்கப்பட்ட முதல் வளைகுடா நாடுகளுக்கான சேவை,

???? இந்தியாவில் இருந்து ஷார்ஜாவிற்கு தொடங்கப்பட்ட முதல் விமானசேவை.

???? இந்தியாவில் பெருநகரத்தையும், இரண்டாம்நிலை நகரத்தையும் இணைத்து தொடங்கப்பட்ட முதல், வெளிநாட்டிற்கான விமானசேவை,

???? இந்தியாவில் உள்நாட்டு விமானசேவையையும், வெளிநாட்டு விமானசேவையையும் இணைத்து தொடங்கப்பட்ட முதல் வெளிநாட்டு விமானசேவை,

???? இந்தியாவின் இரண்டாம்நாலை நகரங்களில் இருந்து “பாயிண்ட் டூ பாயிண்ட்” வகையில் வெளிநாட்டு விமானசேவையை வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கான முன்னுதாரண சேவை,

???? இன்றைய குறைந்த கட்டண விமானநிறுவனங்களுக்கான பல வெளிநாட்டு வழித்தடங்களுக்கு அடித்தளமிட்ட விமானசேவை,

என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே பொதிந்துள்ள விமானசேவை இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” விமானசேவை ஆகும்.

Advertisement

கால் நூற்றாண்டிற்கு முன்னர் எவ்வாறு யாருடைய முயற்சியில் இந்த விமானசேவை தொடங்கப்பட்டது என்ற வரலாற்றை ஆராய்ந்ததில் பல்வேறு உணர்வுப்பூர்வமான தகவல்கள் கிடைத்தன. அவற்றைக் காண்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபயில் உள்ள, தமிழர்களால் நடத்தப்படும் அமைப்பானது ஈமான்- IMAN என்று அழைக்கப்படும் “இந்தியன் முஸ்லிம் அசோசியேசன்” ஆகும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகளால் நடத்தப்படும் தோழமை அமைப்பு இதுவாகும். 1996 கால கட்டத்தில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த, அக்காலகட்டத்தில் யூஏஇ-ல் பிரபலமான ETA நிறுவனத்தின் நிறுவனரான அல்ஹாஜ் சையது சலாஹுதீன், துணைத்தலைவராக இருந்த அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ் (CARS), செயலாளராக இருந்த, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அப்துல் ரற்மான், (இவர் அன்றைய காலகட்டத்தில் துபய் இஸ்லாமிக் பேங்க்-ன் தொழில்நுட்பத்துறையின் வைஸ் பிரசிடென்ட் , Vice President, IT operations ஆக இருந்தார்)

துணைச்செயலாளர்களாக அல்ஹாஜ் டனாடா அப்துல் லத்தீப் மற்றும் அல்ஹாஜ் குத்தாலம் லியாகத் அலி மற்றும் நிர்வாகிகளான அல்ஹாஜ் பாருக், அல்ஹாஜ் அப்துல் கதீம், அல்ஹாஜ் முகம்மது தாஹா உள்ளிட்ட பலர்,

இது தவிர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் வெளிநாடுகளுக்கான அமைப்பான காயிதே மில்லத் பேரவை, துபய்ன் தலைவரான இராஜகிரி தாவூத் பாட்சா,

துபய் தமிழ்ச்சங்கத்தின் அன்றைய காலகட்டத்தின் செயலாளரான லப்பைக்குடிக்காடு அன்வர் பாட்சா ஆகியோரின் சிந்தனையில் உதித்ததே திருச்சிராப்பள்ளியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏதாவது ஒரு விமானநிலையத்திற்கு நேரடி விமானசேவை வேண்டும் என்பது.

அனைவரும் ஒருங்கிணைந்து இந்த யோசனையை கோரிக்கையாக்கி, அன்றைய இந்தியன் ஏர்லைன்ஸ், வளைகுடா நாடுகளுக்கான மண்டல மேலாளரான திரு.துரைராஜ் அவர்களிடம் சொல்ல, ஏற்கனவே இதே சிந்தனையில் இருந்த திரு துரைராஜ் அவர்கள் மேலும் தீவிரமாக திருச்சிராப்பள்ளியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏதாவது ஒரு விமானநிலையத்திற்கான நேரடி விமானசேவையை செயலாக்கம் செய்வது பற்றி சிந்தித்தார்.

இந்நிலையில் இதே கோரிக்கையை துபய் ஈமான் சங்கம் மற்றும் துபய் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து,

களமருதூர் அல்ஹாஜ் சம்சுதீன் அவர்கள் தலைவராக இருந்த அபுதாபியைச் சேர்ந்த அய்மான் சங்கம்,

முனைவர் திரு. மூர்த்தியை தலைவராகக்கொண்ட அஜ்மான் தமிழ்ச்சங்கம், ஷார்ஜா தமிழ்ச்சங்கம், ராஸ்-அல்-ஹைமாஹ் தமிழ்ச்சங்கம், எமிரேட்ஸ் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த கோரிக்கையை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானநிறுவனத்திற்கு திரு. துரைராஜ் மூலமாகவும், துபயில் இருந்த கன்சுலர் ஜெனரல் மூலமாகவும் வைத்தன.

Advertisement

அன்றைய இந்தியன் ஏர்லைன்ஸின் வளைகுடா நாடுகளுக்கான மண்டல மேலாளர் திரு.துரைராஜ் அவர்களின் அயராத உழைப்பினால் இறுதியில், திருச்சிராப்பள்ளியில் இருந்து ஷார்ஜாவிற்கு இயக்க அனுமதி பெறப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி ஷார்ஜா விமானநிலையத்தின் முதல் பட்டியலிடப்பட்ட விமானசேவையாகவும் (Scheduled services) இந்த சேவை அமைகிறது. இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” சேவையின் விளைவாக ஐக்கியஅரபு அமீரகத்தின் பிற சிறிய விமானநிலையங்களான ராஸ்-அல்-ஹைமாஹ், புஜைராஹ், அல்-அய்ன் போன்ற விமானநிலையங்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதுபற்றி தனியாக வேறொரு பதிவில் விளக்கமாகக் காண்போம்.

இந்தியாவின் இன்றைய பன்னாட்டு விமானப்போக்குவரத்தில் 50% வளைகுடா நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில், இந்தியாவின் விமானநிலையங்களில் இருந்து, குறிப்பாக இரண்டாம் நிலை விமானநிலையங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு,

புறப்படும் மற்றும் சேருமிடங்களுக்கு மட்டும் இடையிலான (Point to Point) வகை வழித்தடங்களுக்கு அடிப்படையான விதையாக இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” விமானசேவை அமைகிறது. இவ்வகை வியாபார யுக்தியைப் பயன்படுத்தியே இன்றைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமானநிறுவனங்கள் பெருவெற்றி பெற்று இலாபமீட்டி வருகின்றன. இது பற்றியும் பின்னர் விரிவாகக் காண்போம்.

இவை அனைத்திற்கும் விதையிட்டவர் அன்றைய வளைகுடா நாடுகளுக்கான இந்தியன் ஏர்லைன்ஸ் மண்டல மேலாளர் (Regional Manager, Gulf) திரு.துரைராஜ் அவர்களே. இவருக்கு உறுதுணையாக இருந்தவர் அன்றைய இந்தியன் ஏர்லைன்ஸின் மூத்த நிர்வாக இயக்குனர் (CMD) திரு.அனில் பைஜஸ் அவர்கள்.

திரு.துரைராஜ் அவர்களின் முறையான திட்டமிடல், யோசனை (Ideology) அன்றைய இந்தியன் ஏர்லைன்ஸுக்கு மட்டுமல்ல, இன்றைய இந்திய விமானத்துறைக்கே மிகப்பெரிய வியாபார யுக்தியாக (Business Strategy) அமைந்தது. இது பற்றிய தெளிவான பதிவு பின்னர்.

துபயில் உள்ள ஈமான் அமைப்பானது எப்போதும் துபையில் உள்ள இந்தியன் கன்சுலேட்டிடம் ஒரு இணக்கமான சூழலுடன் இருக்கும். அன்றைய காலகட்டத்தில் துபயில் இருந்த கன்சுலர் ஜெனரல் திரு.பிரபு தயாள் மற்றும் கன்சுலேட் அதிகாரி திரு.அசோகன் மற்றும் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அம்பாசிடர் திரு.முரளீதர மேனன் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் அன்றைய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.I.K.குஜ்ரால் அவர்களிடம் ஈமான் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர் மூலம் மத்திய பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதே காலகட்டத்தில் இங்கு திருச்சிராப்பள்ளியில் அன்றைய புதுக்கோட்டை மக்களவை உறுப்பினராக இருந்த திரு.திருச்சி சிவா, தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக இருந்த திரு.பழனிமாணிக்கம், பெரம்பலூர் மக்களவை உறுப்பினராக இருந்த அ.ராசா மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராக இருந்த திரு.அடைக்கலராஜ் ஆகியோர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கட்டுப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மக்கள் எளிதாக அணுகும் விமானநிலையம் திருச்சிராப்பள்ளி என்பதால் அன்றைய புதுச்சேரி மக்களவை உறுப்பினர் திரு.ஹஸன் பரூக் மரைக்காயர் ஆகியோர் இணைந்து அன்றைய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திரு.திண்டிவனம் வெங்கட்ராமன் மூலம் அன்றைய மத்திய பயணிகள் விமானப்போக்குவரத்துறை அமைச்சர் திரு.C.M.இப்ராஹிம் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அன்றைய அரசியல் சூழலில் திமுக ஆதரவுடன் மத்தியஅரசு அமைந்திருந்ததால் உடனடியாக வான்வழித்தட அனுமதியும் கிடைத்தது. இது மிகப்பெரிய உழைப்பு மற்றும் தனியான பதிவு. முழு விபரமும் பின்னர் தனியாக பதிவிடப்படும்.

விமானசேவை கிடைத்தாயிற்று,

சந்தைப்படுத்துதல் எவ்வாறு?

அக்காலகட்டத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால், அன்று வாட்சப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இல்லை. ஏன் மொபைல் போன்களே இல்லை. திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல்லுக்கு பேசவேண்டும் என்றாலே STD கட்டணம். துபய்ல் இருந்து ஷார்ஜாவிற்கோ, ஷார்ஜாவில் இருந்து அஜ்மானிற்கோ பேசவேண்டும் என்றால் கூடுதல் கட்டணம். ஐக்கிய அரபு அமீரக பாலைவனத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் குறைந்த காலகட்டம், சாலைப்போக்குவரத்து வசதிகள், துபயில் RTA பேருந்துகள், மெட்ரோ ரயில் இல்லாத காலகட்டம் அது. இவ்வகை இடர்பாட்டில் இந்த சேவையை எவ்வளவு சிரமத்துடன் அற்பணிப்புடன் ஈமான் சங்கம், காயிதே மில்லத் பேரவை, ஜமாலியன்ஸ்-துபை சேப்டர், தமிழ்ச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து சந்தைப்படுத்தினர் என்பது சாதாரணமான விசயமல்ல, அவை உணர்வுப்பூர்வமான வரலாற்றுப் பதிவுகளாகும். இதுவும் பின்னர் விபரமாகப் பதிவிடப்படும். இந்த “திருச்சிராப்பள்ளி – ஷார்ஜா” மட்டுமல்ல அதற்குப்பின்னர் ஷார்ஜாவை மையமாக வைத்து இந்தியன் ஏர்லைன்ஸால் தொடங்கப்பட்ட அனைத்து சேவைகளையும் சந்தைப்படுத்த திரு.துரைராஜ் அவர்கள் எடுத்த முயற்சிகள், அதற்குப் பின்னர் திரு.துரைராஜ் அவர்கள் இடத்திற்கு வந்த, சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) இருந்து ஒய்வு பெற்ற திரு.ஷ்யாம் சுந்தர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் எல்லாம் உணர்வுப்பூர்வமான வரலாறுகள்.

அதேகாலகட்டத்தில் திருச்சிராப்பள்ளியில் இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளாக இருந்த திரு.பன்னீர்செல்வம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.ராஜன் ஆகியோருடைய அற்பணிப்பு உழைப்பை நேரில் பார்த்தவர்கள் விவரித்துச் சொல்லும்போது கேட்பவர்களின் மெய் சிலிர்க்கும்.

அதுமட்டுமன்றி அப்போது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் ஓடுதளமானது வெறும் 6,135 அடி மட்டுமே. இதை முழுமையாக பயன்படுத்தினால் மட்டுமே ஏர்பஸ் A 320 விமானத்தை இறக்கி ஏற்ற முடியும். இதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகள், குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை தொடர்பான வசதிகளை அன்றைய விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரி திரு.சீனிவாசன் அவர்கள் தலைமையில் செய்து கொடுத்ததெல்லாம் மிக நீண்ட பதிவு. இதுவும் பின்னர்.

இது மட்டுமன்றி இன்னும் பல சுவராசியமான விசயங்கள் உள்ளன. இவ்வளவு வரலாற்றை பின்புலமாகக்கொண்டது இந்த “திருச்சிராப்பள்ளி -ஷார்ஜா” நேரடி விமானசேவையாகும். அன்று இந்தியன் ஏர்லைன்ஸால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமானசேவையானது இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸால் தினசரி சேவையாக சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள், இந்த சேவைக்காக கால் நூற்றாண்டிற்கு முன்னர் பிரதிபலன் பாராது உழைத்தவர்களை நினைவு கூர்வதே அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு ஆகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *