சபாஷ்! சரியான போட்டி- விறுவிறுப்படையும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி 

சபாஷ்! சரியான போட்டி- விறுவிறுப்படையும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி 

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது . 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முற்போக்கு கழகம் ,திராவிட முற்போக்கு கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

திமுகவின் சார்பாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி-யை அக்கட்சி மீண்டும் களமிறங்கியுள்ளது. கடுமையான போட்டியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு அஇஅதிமுக சார்பில் இரண்டு முறை திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ப. குமார் களம் காண்கிறார்.புதிதாக தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகானந்தம் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்கள். 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருவெறும்பூர் தொகுதியானது மத்திய மற்றும் மாநில அரசு பிரிவுகளில் தொழில் மயமாக்கப்பட்ட மிக முக்கிய பகுதியாகும்.

இச்சூழ்நிலை குறித்து திமுகவினரிடம்‌ கேட்கையில்,
"கிட்டத்தட்ட 1996 இல் இருந்து கடந்த ஐந்து சட்டமன்ற தேர்தலில் நான்கு முறை திமுக இந்த தொகுதியில் வென்று உள்ளது. அதனால் இம்முறையும் திமுக வெற்றி நிச்சயம்" என்று  கூறுகின்றனர். மேலும், " மகேஷ் பொய்யாமொழி எப்போதும் மக்களிடைய நல்ல உறவை ஏற்படுத்திவைத்துள்ளவர்.
கம்யூனிஸ்ட்  தொழிற்சங்கம் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்" என்றும் திமுகவினர்‌ நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் கூறியதாவது.." இதுவரை 5 ஆண்டு காலமாக இந்த சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வாக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதுவும் மக்களுக்காக செய்யவில்லை .மக்களும் இதனை நன்கு அறிவர்! எனவே இந்த தேர்தலில் கண்டிப்பாக அஇ அதிமுக வெற்றி பெற்றே தீரும்" என்று கூறியுள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் எம் முருகானந்தம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர். ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவர் கட்சியில் இணைந்த குறைந்த காலத்திற்குள்  மண்டல செயலாளர் பதவியில் இருந்து மாநில செயலாளராக உயர்ந்திருக்கிறார் .
மக்களிடையே நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருப்பதாக கட்சிக்குள்‌ கூறப்படுகிறது.  "இரண்டு திராவிட கட்சிகளின் மீதும் பொதுமக்களுக்கு இருக்கும் அதிருப்தியும்  வெறுப்பும், புதிதாக ஒருவர்‌ மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் என்ற எண்ணமுமே மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறச்செய்யும்" என்று கூறுகின்றனர் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி செயல்பாட்டாளர்கள். 

போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஒரே சமூகத்தினை சேர்ந்தவர்கள். அதனால் சமூகம் சார்ந்த பிரிவினை ஏதும் இருக்காது என்றும் நம்பப்படுகிறது .
இப்படி மூன்று பெரும் கட்சிகளின் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் திருச்சியில்  மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I