ஊட்டி மலை ரயிலுக்கு திருச்சியில் தயாராகும் ரயில் இஞ்ஜின் - 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி மலை ரயில்!!
இயற்கை அன்னையின் இளைய மகள் ஊட்டி. மலையும், மலைத்தொடர்களும், எழில் கொஞ்சும் மரங்கள் அடர்ந்த வனங்களும் பசுமை பள்ளத்தாக்குகளும் காண்போரின் கண்களை கவர்ந்திழுந்து உள்ளத்தில் உவகையை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து ஊட்டி என்றால் அது மிகையாகாது. இதன் அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதேப்போன்று உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை புரிவது வழக்கம்.
இத்தகைய புகழ்பெற்ற ஊட்டியின் மற்றொரு சிறப்பு பல்சக்கர தண்டவாளத்தில் இயக்கப்படும் நீராவி மலை ரயில். ஆசிய கண்டத்திலேயே பல்சக்கர தண்டவாளத்தில் இயக்கப்படும் இந்த மலை ரயிலானது நூற்றாண்டுகளை கடந்து யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்று நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
வளைந்து நெளிந்து பள்ளத்தாக்குகளையும், மலைக்குகைகளையும் கடந்து சென்று வனங்களின் ஊடே செல்லும் இந்த இரும்புக்குதிரை அதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் கண்களை கொள்ளை கொள்கிறது. இதில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வயது முதிர்ந்த பெரியவர் முதல் சிறுவர், சிறுமியர் வரை நீராவி மலை ரயிலில் பயணம் செய்ய விரும்புவர். பழமை வாய்ந்த இந்த பாரம்பரிய ரயில் பயணம் இதில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவம் வாய்ந்ததாக இருக்கும். கடந்த 20 வருடங்களாக ஊட்டி – குன்னூர் இடையே டீசல் இஞ்சின் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு நீராவி மூலம் ரயில் இயக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் நீராவி ரயில் துவக்கப்பட்டது. 1917 முதல் 1925 வரையிலான கால கட்டத்தில் நிலக்கரி உதவியுடன் இயங்கிய பழமையான நீராவி ரயில் எஞ்சின் இயக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி குன்னூர் இடையே டீசல் எஞ்சின் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நீராவி மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி ரயில் இயக்கப்பட உள்ளது. நீராவி ரயில்கள் சுவிட்சர்லாந்திலிருந்து 100 வருடங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி பொன்மலை பணிமனையில் முழுவதும் பொன்மலை தயாரிப்பில் புதிய நீராவி எஞ்சின் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு சுமார் 30 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து முதன்மை பணிமனை மேலாளர் ஸ்யாமதர் ராம் கூறுகையில்...
“ஊட்டி மலை ரயிலுக்கு புதிய நிலக்கரி நீராவி என்ஜின் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட உள்ளது. கடந்த 90 ஆண்டுகளில் கண்டிராத வகையில் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த நீராவி மலை ரயிலானது பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாராகி வரும் எக்ஸ் வகை மலை ரயிலில் நிலக்கரி எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. எஞ்ஜினுக்கான கொதிகலன்கள் (பாய்லர்) மற்றும் சிலிண்டர்கள் திருச்சி மற்றும் கோவையில் உள்ள தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்த மீட்டர் கேஜ் மலை ரயிலானது 8 கோடி ரூபாயில் தயாராவதாக குறிப்பிட்டார்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலைரயில் 97.6 டன் எடை வரை இழுக்கும்திறன் கொண்டது. 4500 லிட்டர் கொள்ளவு கொண்ட வாட்டர் டேங்க், மற்றும் 3.1 டன் நிலக்கரியை இதில் ஸ்டோரேஜ் செய்ய இயலும். 900 குதிரைத்திறன் கொண்ட இந்த மலை ரயில் மேலே இழுத்து செல்வதற்கு தோராயமாக 12 ஆயிரம் லிட்டர் நீரும்,கீழே இறங்குவதற்கு 1600 லிட்டரும் தேவைப்படும். அதேப்போல 3 டன் நிலக்கரி தேவைப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க மலை ரயிலை நீராவி என்ஜின் மூலம் ரயில்வே நிர்வாம் முடிவு செய்துள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.