திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் அங்கபிர்ஷனம், தீ சட்டி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்டவைகளை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.

இந்த வகையில் முடிகாணிக்கை நேர்த்திக்கடனை செலுத்தும் மண்டபத்தில் வேலை பார்க்க அங்கீகாரம் இல்லாத சிலர் கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றிமொட்டை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகமும் அவ்வப்போது போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள முடிமண்டப பணியாளர்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் பக்தர்களுக்கு மொட்டை அடிப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து அவர் ரகசிய விசாரணை நடத்தி, உதவி ஆய்வாளர் ராஜ்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பொதுமக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையும், பாராட்டும் குவிந்து வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments