Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் அருகே அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சை தாமதம் – 4½ வயது சிறுவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் மருத்துவர் இல்லாததால், மருத்துவ உதவி கிடைக்காமல் 4½ வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணனூர் ஊராட்சியில் முருகன் கோவில் தெரு, நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (34). கூலி தொழிலாளியான இவரும், அவரது மனைவி திவ்யாவும் ஒரே மகனாக பிரஜன் (4½) என்பவரை வளர்த்து வந்தனர். உடல்நிலை சரியில்லை என கொண்டு செல்லும் வழியில் மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று உள்ள நிலையில் சம்பவம் ஏற்பட்டதாக புகார்,

இறந்த சிறுவன் துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். செல்லும் வழியில் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது சிறுவனுக்கு திடீரென மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் காலை 11:30 மணியளவில் பெற்றோர் குழந்தையை கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாமல், ஒரே ஒரு நடுநிலை மருத்துவ உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த உதவியாளர் உடனடி சிகிச்சை அளிக்காமல் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸிலும் செவிலியர் இல்லாமல் ஓட்டுநர் மட்டும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மேலும் தாமதிக்காமல் பெற்றோர் தங்களது சொந்த வாகனத்தில் குழந்தையை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர் கூறுகையில், கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களுக்கு இந்த ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையமே இருப்பதாகவும், அவசர நேரங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவ ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட தங்கும் விடுதியில் அவர்கள் தங்குவதில்லை என்றும், நள்ளிரவில் முதல் உதவிக்காக சென்றாலும் மருத்துவர் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *