திருச்சி தீ விபத்து - வீடு கட்டி தர வலியுறுத்தி தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் சாலை மறியல்
திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.அதில் அங்குள்ள 20 குடிசைகள் எரிந்து தீக்கிரையாயின, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.வீடுகளில் வசிப்பவர்களின் உடமைகள் மட்டுமல்லாது சான்றிதழ்கள், ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாயின.தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் நிவாரணம் வழங்கிய நிலையில்,
இதனிடையே தீ விபத்து ஏற்பட்டு இன்றுடன் மூன்று தினங்களானநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியும்,தீ விபத்தால் வீடுகளை இழந்த தங்களுக்கு வீடுகள் கட்டி தர வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் சங்கிலியாண்டபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் உதவிகளைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.