தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பது திருச்சி! திருச்சியின் மையப் பகுதியாக இருப்பது நம்முடைய காந்தி மார்க்கெட்! தேசப்பிதா காந்தியடிகளால் திறக்கப்பட்ட சந்தை என்று இன்றளவும் சிறப்பு வாய்ந்த ஒன்று! இப்போது கொரோனா காலகட்டங்களில் சில கரை வேஷ்டிகளால் வியாபாரிகள் அங்குட்டு பாதி, இங்கிட்டு பாதியாக திண்டாடி வருகின்றனர்! இது குறித்த ஒரு சிறப்பு தொப்பை காண்போம்.
திருச்சி காந்தி மார்க்கெட் சாலையில் மிகுந்த போக்குவரத்து சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஸ்ரீரங்கம் தொகுதியில் கள்ளிக்குடியில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை கட்ட அடிக்கல் நாட்டி பின்பு அமைச்சர்கள் 2017 செப்டம்பரில் திறந்து வைத்தனர். சுமார் 70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த புதிய மார்க்கெட் பகுதிகளுக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்ல மறுத்து விட்டனர்.
அதன் பிறகு காந்தி மார்க்கெட்டில் உள்ள மற்ற வியாபாரிகளை புதிய மார்க்கெட்டுக்கு மாற்ற ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டர் ராஜாமணி முயற்சியும் எடுத்தும் 
பலனிக்கவில்லை.
அடுத்த சில நாட்களில் பால்பண்ணை பகுதியில் வெங்காய வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து அமைச்சர் வளர்மதி மற்றும் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் வெங்காய மண்டி மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது. இங்கு இன்றளவும் கடை நடத்தி வருகின்றனர். திருச்சியின் ஆட்சியராக ராஜாமணி இருந்த போது காந்தி சந்தை இடமாற்றம் செய்ய முழு மூச்சாக முயன்ற போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ப.குமார் மற்றும் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, கோவிந்தராஜூலு மற்றும் சில முக்கிய அரசியல் பிரபலங்களின் டார்ச்சரில் கலெக்டர் ராஜாமணி டிரான்ஸ்பர் வாங்கி கொண்டே சென்று விட்டார்!! ஆனால் அரசாங்கம் சார்பில் 70 கோடிக்கும் மேல் செலவு செய்து கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் சந்தை இன்றளவும் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் தனி மனித இடைவெளி கடைபிடிக்காமல் இருந்ததால் திருச்சி காந்தி மார்க்கெட்டை அதிரடியாக மூட சொல்லி திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார். மேலும் பால்பண்ணை பகுதியில் புதிய வெங்காய மண்டியில் மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தும், வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார். அதன்பிறகு பால்பண்ணை பகுதியில் அணுகு சாலையில் வியாபாரிகள் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் மார்க்கெட்டை சமயபுரம் பகுதிக்கு மாற்ற முயற்சி செய்தது மாவட்ட நிர்வாகம்.
வியாபாரிகளின் எதிர்ப்பை தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் மொத்த காய்கறி கடைகள் விற்பனை நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். இதற்கிடையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி மாவட்ட விவசாயிகள் கள்ளிக்குடி புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்ய ��ேண்டும் என்ற கோரிக்கையுடன் கள்ளிக்குடி அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் தற்காலிக சந்தை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் சற்று நாட்களுக்கு முன்பாக திருச்சி காந்தி மார்க்கெட்டினை திறக்கவேண்டும் என்று வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜூலு தலைமையில் 24 சங்கங்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறப்பது பற்றி முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். ஜூன் 8 க்கு பிறகு முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.
தற்போது உள்ள திருச்சியில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் காலநிலையில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய விபரீதத்தை சந்திக்க நேரிடும்! எனவே இப்போது உள்ள காந்தி சந்தை இடமாற்றம் தான் ஏற்றதாக உள்ளது.இதற்கு ஏற்றார் போலவே திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு செயல்பட்டு வருகிறார்.
பகடைக்காய் உருட்டி இந்த ஆட்சியரையும் ஏதாவது செய்து விடலாம் என சில கரை வேஷ்டிகள் வெளிப்படை வேலையில் இறங்கினாலும், அதற்கெல்லாம் சலிக்காமல் “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்” என்கிற விதமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்றாட பணிகளை செவ்வனே செய்து வருகிறார் திருச்சி ஆட்சியர் சிவராசு. அவருடைய பார்வையில் விவசாய பொருட்கள் நேரடியாக பொதுமக்களிடம் சென்று சேர வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயலாளர் எஸ்.பி.பாபுவிடம் பேசினோம்…. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பால் பண்ணையில் வியாபாரம் செய்தோம். தற்போது ஜி.கார்னர் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். தமிழக அரசிடம் அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் நாங்கள் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய தொடங்குவோம். அதுவரையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி நாங்கள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
இதில் ஒரு வியாபாரிகள் கூட்டம் அரசியல் சார்ந்து ஏதாவது ஒரு களங்கம் விளைவிக்க வேண்டும் என காந்தி மார்க்கெட்டினை மையப் பொருளாக வைத்து திறக்கவேண்டும் என வெளிபந்தா காட்டி வருவது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.ஒருபுறம் காந்தி மார்க்கெட்டை திறந்தே ஆகவேண்டும் என்று ஒரு குழுவும், மற்றொருபுறம் நாங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி செல்வோம் என ஒரு குழுவும்,மற்றொரு குழு எங்களுக்கு புதிய காந்தி மார்க்கெட் கள்ளிக்குடி பகுதியில் வேண்டுமெனவும் போராடி வருகின்றனர்!
இதற்கு என்னதான் தீர்வு என்றால்? திருச்சி என்பது தமிழகத்தின் மையப்பகுதி. உலக அளவில் வளர்ந்து வரும் நகரங்களில் 8வது இடத்தில் உள்ளது. விமான நிலையம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகமான பயணிகளை கையாண்டு வரும் ஒரு மாவட்டம் திருச்சி. போக்குவரத்து நெரிசல்களும், அன்றாட வேலைக்கு செல்பவர்களும் இந்த காந்தி மார்க்கெட்டால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வருகின்ற காலங்களில் மாவட்ட வளர்ச்சிக்கு காந்தி மார்க்கெட் கள்ளிக்குடிக்கு மாற்றினால் மட்டுமே நலம் தரும் ஒன்றாக அமையும்.இதற்கு தீர்வுகாண தமிழக அரசு இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவர்களுக்கு மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறது. என்னதான் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           127
127                           
 
 
 
 
 
 
 
 

 06 June, 2020
 06 June, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments