திருச்சி மரக்கடையிலுள்ள  எம்ஜிஆர் சிலை உடைப்பு - அதிமுகவினர் போராட்டம்

திருச்சி மரக்கடையிலுள்ள  எம்ஜிஆர் சிலை உடைப்பு - அதிமுகவினர் போராட்டம்

திருச்சி மரக்கடை பகுதியில் 1995 ஆம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில்.. மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய திருவுருவச் சிலை நிறுவப்பட்டது.

அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், நல்லூசாமி ஆகியோர் இந்த சிலையை திறந்து வைத்தனர்.

கடந்த 26 ஆண்டுகளை கடந்து கம்பீரமாகவும் மக்களுக்கு அடையாளச் சின்னமாகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை மர்ம நபர்களால் இன்று உடைக்கப்பட்டு இருக்கிறது.

இன்று காலை திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைக்கப்பட்டதை அறிந்த திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களையும் சமூக விரோதிகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மிகவும் பரபரப்பான பகுதியான மரக்கடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து, கைது  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அதிமுகவினரின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd