திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் முக்கிய நான்கு கோரிக்கைகளுடன், இன்று (23.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்களை சந்தித்து எனது கோரிகைகள் குறித்து விளக்கம் அளித்தேன்.
அதில், முதலாவதாக, திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகு சாலை (Service Road) அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், அதிலுள்ள கட்டடங்களை இடிப்பதற்கும் தேவைப்படும் நிதியின் விவரங்களை வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் ஏற்பட்ட தாமதத்தை எடுத்துரைத்து,
தங்களின் கடிதத்தில் விரிவான விபரங்களுடன் தேவைப்படும் நிதி பற்றி விரைவாக தெரியப்படுத்தினால், ஒன்றிய அரசிடம் அதை நான் பெற்றுத்தர வேண்டிய பணிகளை மேற்கொள்ள உதவியாய் இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன். அத்துடன், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டு மனைப் பட்டா வழங்குதல் தொடர்பாகவும், எழில் நகரில் சாலை அமைத்துத் தர வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை கடிதங்களை வழங்கினேன்.
மேலும், முக்கியமாக, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில், அல்லித்துறை ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மத்தியில், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு இடையே அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடையை தடுத்து நிறுத்திட அப்பகுதி மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கையை எடுத்துரைத்து அது குறித்தும் கோரிக்கை கடிதம் கொடுத்தேன். அனைத்தையும் பெற்றுக் கொண்டும், விளக்கங்களை கேட்டுக் குறித்துக்கொண்டும் ஆவன செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பினர் மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி. சேரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
Comments