கஜா புயலின் துயர் துடைக்க திருச்சி அமைப்பினரின் தென்னை திருவிழா!
இலையாக, காயாக, பூவாக, வீடுகட்ட, மூலிகை என தென்னையில் தூக்கி வீச கூடியது ஒன்றுமே இல்லை. ஆனால் கஜா என்னும் புயல் தென்னை விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வையுமே தூக்கிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக நாகப்பட்டினம், அதிராம்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் என ஒட்டுமொத்த விவசாயிகளையே இன்றளவும் மீள முடியாத துயரை செய்து போனது கஜாபுயல்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது திருச்சியிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிய ஆட்டோ முழுவதும் முறிந்து கிடந்த தென்னை மரங்களில் இளநீரை கொடுத்து அனுப்பிய விவசாயிகள் தமிழகத்தையே நெகிழ வைத்தனர். அவ்வளவு சோகங்களுக்கு மத்தியிலும் அன்பை வெளிப்படுத்திய விவசாயிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை!
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தின் Shine TREEchy அமைப்பு மற்றும் VDart நிறுவனத்தின் சார்பில் கஜா புயலால் தென்னையை இழந்த விவசாயிகளுக்காக முதல்கட்டமாக தென்னை திருவிழாவாக இன்று கொண்டாடப்பட்டது. திருச்சி துவாக்குடி தேவராயநேரி பகுதியில் இன்று முதல் கட்டமாக 250 தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் அடுத்த கட்டமாக திருச்சியின் பல பகுதிகளில் தென்னை திருவிழாவினை விவசாயிகளுக்காக கொண்டாட காத்திருக்கின்றனர் இந்த அமைப்பினர்.
இன்று நடந்த தென்னை திருவிழாவில் VDart நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாக்சன், சண்முகம் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புயலால் இழந்த மரங்களுக்கு மாற்றாக புதியதொரு பாதையை எடுத்து வைக்கும் திருச்சி அமைப்பினருக்கு நீங்களும் கைகோர்த்து உதவலாம். தொடர்புக்கு 99019 65430