Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி திருவானைக்காவல் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் திருக்கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவிலுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவதுவழக்கம்.  அதன்படி மண்டல பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் கடந்த மார்ச் 15ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து தினசரி ஜம்புகேஸ்வரர் சுவாமி, அம்பாளுடன் ரிஷபவாகனம், காமதேனுவாகனம், சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்றுவந்தது. 6ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் ஜம்புகேஸ்வரர் சுவாமியும், அம்பாளும் ஒருதேரிலும், அகிலாண்டேசுவரி தாயார் ஒருதேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.

முதலாவதாக சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் இழுத்துவந்து தென்மேற்கு மூளையில் வந்து நிறுத்தினர் அதனைத் தொடர்ந்து  அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. தேரானது 4வீதிகளிலும் வலம்வந்து பின்னர் இரண்டு தேரும் ஒரே நேரத்தில் நிலையை வந்தடையும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இந்த மண்டல பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி மண்டலா அபிஷேகத்தோடு நிறைவு பெறுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *