திருச்சி விஷன் மூன்றாம் பார்வையில் "திருச்சி நேற்று இன்று நாளை"!! மிஸ் பண்ணாம படிங்க!!

திருச்சி விஷன் மூன்றாம் பார்வையில் "திருச்சி நேற்று இன்று நாளை"!! மிஸ் பண்ணாம படிங்க!!

திருச்சி என்ற பெயரை சொன்னவுடன் உள்ளுக்குள் ஒரு ஆனந்தம். அருகில் இருப்பதால் தான் அதன் அருமை தெரியாதோ என்னவோ! திருச்சி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல பொதுவாக அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பெட்டகம்…திருச்சி விஷன் மூன்றாம் பார்வையில் "நேற்று இன்று நாளை" என்கின்ற திருச்சியின் சிறப்பு தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்.

இமயமலையை விட மிகவும் பழமையான நம்முடைய திருச்சி மலைக்கோட்டை! 500 ஆண்டுகள் பழமையான நத்தர்ஷா பள்ளிவாசல், பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட லூர்து மாதா கோவில், கரிகாலன் கட்டிய கல்லணை மற்றும் முக்கொம்பு என காவிரியும் கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை பிரித்து செல்லும் காட்சி காண்பவர்களை நெகிழச் செய்கிறது.

சங்ககாலம் தொட்டு இன்றுவரை திருச்சிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. திருச்சி இது மாவட்டம் மட்டுமல்ல! மனிதத்தின் உச்சம்!! மலைக்கோட்டை பெருமையை கொண்டு கலை கோட்டையை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாநகரம் தான் நம் திருச்சி! விருந்தோம்பல் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறை பயிற்சி வல்லுனர் கபிலன் அவர்களின் உதவியுடன் இந்த கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

விருந்தோம்பல் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறை பயிற்சி வல்லுனர் கபிலன்

நேற்றைய திருச்சியில் சங்க காலம் தொட்டு வாழ்ந்த ஒட்டக்கூத்தரிலிருந்து இன்றளவும் பலரை உருவாகிக்கொண்டிருக்கும் திருச்சி மாநகரம். நடந்தாய் வாழி காவிரி என காவிரி கரையோரத்தில் எழில்கொஞ்சும் அழகையும் அணை தாங்கி நிற்கும் மாவட்டம் திருச்சி! அண்ணாந்து பார்க்க வைக்கும் ஸ்ரீரங்கம் கோபுரமும், அருள்பாலிக்கும் திருவானைக்கோவில், நகருக்குள் வலம் வரும் உய்யகொண்டான் திருமலை ஆறும், இரண்டாம் உலகப் போரின் நினைவுச் சின்னமாக இன்றளவும் விளங்கும் காந்தி மார்க்கெட் மணிக்கூண்டும், தேசப்பிதா காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட காந்தி மார்க்கெட்டும் தொன்றுதொட்டு அதன் பாரம்பரியமும் இன்றளவும் வந்து கொண்டே தான் உள்ளது.

இன்றைய திருச்சியில் நாகரீக வளர்ச்சியில் சாலைகள் விரிவடைந்து போக்குவரத்து நெரிசல் அடைந்தும் ஒருபுறம் இருந்தாலும் இந்த பாரம்பரியமிக்க நம்முடைய திருச்சியை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை! இதுகுறித்து கபிலன் கூறுகையில்… உண்மையாகவே திருச்சியில் இருப்பதற்கு நாம் மிகவும் பெருமை கொள்ள வேண்டும். கோவா, கேரளா போன்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு அணை உடைந்து விட்டால் அதனை பொதுமக்கள் பார்வைக்காக வைத்து அதன் மூலம் சிறிது வருவாயை மாநகராட்சி ஈட்டுகிறது.

நம்முடைய திருச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முக்கொம்பு மேலணை உடைந்தது. இதனை கட்டும் பணிக்கிடையிலும் அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறி… பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த முக்கொம்பு மேலணை வெள்ளத்தால் உடைந்து விட்டது என கல்வெட்டுகளும் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அளித்து அவற்றின் மூலம் சிறிது வருவாயை ஈட்டி சுற்றுலாத்துறையை மேம்படுத்தலாம்! மேலும் திருச்சியில் பல்வேறு சிறப்புகள் உண்டு 100 பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றார் முன்னாள் ஆணையர். தற்சமயம் 50 பூங்காகளுக்கு மேல் நம்முடைய திருச்சி மாநகராட்சி உருவாக்கி வருகிறது. இன்றைய காலகட்டங்களில் பொது மக்கள் மட்டுமல்லாது சுற்றுலாத்துறையின் இடையே திருச்சியின் பெருமையை வெளிக்கொணர்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த வகையில் ஆவணப்படம் எடுப்பது திருச்சியை பற்றி விவரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஒரு சிறந்த வளர்ச்சியை அடையலாம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தமிழகத்தின் மையப் புள்ளியாக மற்ற மாவட்ட சுற்றுலாகளுக்கு செல்லவேண்டும் என்றால் கூட திருச்சியில் இருக்கும் இடங்களையும் அதன் வரலாற்றையும் நாம் வெளிக்கொணர்ந்தால் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவருவதின் மூலம் வருவாயை ஈட்டலாம் என்கிறார்.

இது ஒருபுறமிருக்க நாளைய திருச்சி எப்படி இருக்கும்! தற்போது உலக அளவில் வளர்ந்து வரும் நகரங்களில் 8வது இடத்தில் உள்ளது திருச்சி. உலக அளவிலேயே எட்டாவது இடத்தில் வளர்ந்த நகரமாக உருவாகி வரும் திருச்சி வரும் காலங்களில் அசூர வளர்ச்சி அடையும். நம்முடைய பன்னாட்டு விமான நிலையம் சில ஆண்டுகளில் சர்வதேச விமான நிலையமாக உருவெடுத்து பயணிகளை அதிகம் கையாளும் விமான நிலையமாகவும், அதிகமான பேர் வந்து செல்லும் ஒரு இடமாகவும் மாறும். மேலும் 2035ம் ஆண்டுக்குள் சென்னை கோயம்புத்தூர் நகரங்களில் செயல்பட்டு வரும் வணிகவளாகம் நம்முடைய ஊர் திருச்சி பஞ்சப்பூரிலும் வரப்போகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கும் பணியும், ஐடி பூங்காக்கள் வேலைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. பாதுகாப்பு படைக்கலன்களை பயிற்சியை HAPP ,OFT ஆகியவை நிலைநாட்டி நாட்டின் பாதுகாப்பை பத்திரப்படுத்தி வருகின்றனர். பாரத மிகுமின் நிலையமும்(BHEL), பாமர மக்களும் படிப்பதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகமும் கொண்டிருக்கும் நம்முடைய திருச்சி. இந்தியாவிலேயே பட்டாம்பூச்சிக்கென ஒரு பூங்காவை அமைத்து ஓர் உயிரும் இவ்வுலகில் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கும் திருச்சி! பல அரசியல் கட்சிகள் திருப்புமுனையாக மாறும் இடமும் திருச்சி! வருங்காலத்தில் வெற்றி வாகை சூடி உலகிலேயே ஒரு தலைசிறந்த நகரமாக உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!

தமிழகத்தின் மையப் பகுதியாக மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களை இணைக்கும் மையமாகவும் உள்ளது. நம்முடைய திருச்சி கார்கில் நாயகன் மேஜர் சரவணனின் மண் திருச்சி.வல்லரசு இந்தியாவின் கனவு கண்ட அப்துல் கலாம் கல்வி பெற்று வரும் திருச்சி!இன்னும் எத்தனை எத்தனையோ கலைத் திறன்களையும், கலை நாயகர்களையும் உருவாக்கிக்கொண்டே உன்னதத்தை சுமந்து நிற்கும் திருச்சி! அசம்பாவிதங்கள் அதிகமின்றி அன்புக்கு அளவுமின்றி மக்களின் மனங்களில் மனிதம் தினம் தினம் வளர்த்துக் கொண்டிருக்கும் மாவட்டம் திருச்சி!

கல்வி கலை அரசியல் அதிகாரம் அன்பு பாசம் மனிதம் என அனைத்திலும் மேலோங்கி இருக்கும் மாவட்டம் திருச்சி. காவிரி கரையோர வயல்களில் மண் வாசம் உண்டு… மக்கள் மனங்களில் மனிதத்தின் வாசம் உண்டு… இன்னும் சொல்லப்போனால் திருச்சியில் பிறப்பது தவம்! திருச்சியில் வாழ்வது வரம்! திருச்சி தின வாழ்த்துக்கள்!!! பெருமை கொள்வோம் திருச்சியில் வாழ்வதை எண்ணி!

நன்றி
புகைப்படங்கள்: Dixith Photography