இன்று (24.07.2025) மாலை 6 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை, புது டெல்லியில் அமைந்துள்ள இரயில் பவனில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் இரயில்வே தொடர்பான கோரிக்கையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டேன்
திருச்சியில் சென்னை ஐ.சி.எஃப். போன்று நவீன இரயில் கோச் தயாரிக்கும் வசதியுடைய உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு முதற்கட்டமாக, திருச்சி பொன்மலை கோல்டன் ராக் பணிமனையை, வந்தே பாரத் வகை நவீன இரயில்களைப் பழுதுபார்க்கும் உயர்தரப் பணிமனையாக மேம்படுத்தும் திட்டம் இரயில்வே துறைக்கு இருந்த நிலையில், அதனை உறுதியாக நிறைவேற்றித்தர வேண்டுமென நான் அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தேன்.
அந்த வகையில், ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு திருச்சி பொன்மலை கோல்டன் ராக் பகுதியில் தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 14.07.2025 அன்று திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் Additional Member of the Railway Board அவர்கள் உறுதி அளித்தார்கள்.
அதற்காகவேண்டி திருச்சி தொகுதி மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்டேன்.மேலும், வந்தே பாரத் இரயில்களைப் பழுதுபார்க்கும் பணிமனையை அமைக்க தேவையான தொடக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன், கடந்த 07.04.2025 அன்று அமைச்சரைச் சந்தித்து, திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி விரைவு இரயில் சேவையைத் தொடங்க வேண்டுமென விடுத்த கோரிக்கைக்கு வாய்மொழி ஒப்புதல் பெறப்பட்டிருந்த நிலையில், இந்த திருச்சி – திருப்பதி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புதிய இரயிலுக்காக திருச்சி மக்கள் ஆவலுடன் காத்திருப்பதை எடுத்துரைத்து, இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு இரயிலை விரைந்து இயக்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடவும் எனது பணிகளும், சந்திப்புகளும் தொடரும். என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் கூறினார்
Comments