மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு படைத்தனர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இதே போல் கடந்த 27 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் வேப்பிலை மாரியம்மன் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தனர். இதைத் தொடர்ந்து காளியம்மன் கோவில்,
காட்டுமுனியப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஆட்டம் பாட்டத்துடன் பக்தி பரவசமாக ர வீதிகளின் வழியாக ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர். அதேபோல் நோய்கள் தீர உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், ஆடு, கோழி பலி கொடுத்தும், சுவாமி வேடமிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் நீர் மோர், பானகம், சர்பத், குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர் ஆகாரங்கள் வழங்கப்பட்டது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகருக்குள் வாகனங்கள் செல்லாத அளவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்களை அனுப்பி வைக்கப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி திருவிழாவை முன்னிட்டு மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments