இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 01.01.2026 தேதியைத் தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளராகும் தகுதியைப் பெற்றவர்கள் அல்லது பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க, நீக்க, அல்லது திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சிறப்புப் பணிகள் 04.11.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 04.11.2025 முதல் 04.12.2025 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்திற்குள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் இப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாகச் சென்று, குடும்பத்தில் உள்ள தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களைப் பெற்றுக் கொண்டு, புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை (இரட்டைப் பிரதிகளில்) வழங்குவார்கள்.

வாக்காளர்கள் இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும்போது வாக்காளர்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை ECINET செயலி மூலமோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமோ பூர்த்தி செய்து, ஒப்புகைச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாவட்டத் தேர்தல் அலுவலகம்/மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தொகுதி வாரியாக மணப்பாறைக்கு 04332-260576, ஸ்ரீரங்கத்திற்கு 0431-2230871, திருச்சிராப்பள்ளி மேற்குக்கு 0431-2410410, திருச்சிராப்பள்ளி கிழக்குக்கு 0431-2711602,

திருவெறும்பூருக்கு 0431-2415734, இலால்குடிக்கு 0431-2541500, மண்ணச்சநல்லூருக்கு 0431-2561791, முசிறிக்கு 04326-260335, மற்றும் துறையூருக்கு 04327-222393 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.வே.இரமணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments