வாக்களிப்பு அதிகரிக்க திருமண அழைப்பிதழ் நூதன விழிப்புணர்வு
வாக்களிப்பை அதிகரிக்க செய்வதற்கு திருமண அழைப்பிதழ் போல் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்து ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரிகள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்களது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நிஷாந்த் கிருஷ்ணா ஆகிய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மகேந்திரன் ஆகியோர் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விநியோகம் செய்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த துண்டுப் பிரசுரங்களில் வாக்களிக்க அழைப்பிதழ் என தலைப்பிட்டு மணமக்கள் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் என்ற வாசகங்களுடன் 06.04.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைபிடித்து சுற்றும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தும்படி அழைக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் இது பற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH