திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நீதிபதி A. பிரபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கே.பெரியப்பட்டி (N), கண்ணுடையான்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள நிலங்கள் அரசால் 2013 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் நில உடைமையாளர்கள் யார் என்பது குறித்த நிலங்கள், தரப்பினர்களுக்குள் பிரச்சனை உள்ள நிலங்கள், போதிய இழப்பீடு வழங்கவில்லை போன்ற நிலங்களுக்குரிய வழக்குகள் திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளில் இழப்பீடு தொகையானது அரசால் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்ட பல நபர்களுக்கு உரிய முகவரி இல்லாததாலும், தற்போது சிலர் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பதாலும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை குறித்த அறிவிப்பு சார்வு செய்ய இயலவில்லை. அறிவிப்பு சார்வு செய்ய முடியாத காரணத்தால் வழக்கை மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இழப்பீட்டுத் தொகைகள் நீதிமன்ற வைப்பீடில் உள்ளது. எனவே பொது அறிவிப்பு கொடுத்து அனைவரையும் அழைத்து வழக்கு தரப்பினர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது பற்றி தெரிவித்தும், சமரசமாக முடித்துக் கொள்ளக்கூடிய வழக்குகளை விசாரிக்கவும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை வரும் 20.09.2025 அன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து மதியம் 12:00 மணி அளவில் நடத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
எனவே சிப்காட் தொழில் பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அன்றைய தினம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்களுடைய வழக்கு விவரங்கள் தெரிந்து கொள்ளவும், சட்ட உதவி பெற்று சமரசமாக முடித்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்கறிஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், சட்டப்பணிகள் ஆணைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments