ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றுகூடி, வறண்டு கிடக்கும் தங்கள் பகுதியை வளமிக்கதாக்கும் முயற்சியில் அமைதியாக ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற அதிகார பலம் கொண்டவர்களின் அலட்சியம் இந்தச் சாமானியர்களின் சக்தியை அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தியமலை கிராம மக்கள்தான் சத்தமின்றி சாமானியரின் சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகின்றனர். சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் இருந்து தற்போது 155 ஏக்கருக்குச் சுருங்கியுள்ள திருத்திய மலை ஏரிக்குத் தண்ணீர் வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. உணவின்றி வற்றிச் சுருங்கும் குடல் போல ஏரியின் வரத்துக் கால்வாய்களும் நீரின்றிக் காய்ந்து, கருவைப் புதர்கள் மண்டி சுருங்கிப் போயின. ஏரியின் வரத்துக் கால்வாயான புங்கன் வாரியைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தச் சாமானியர்கள் ஏறி இறங்காத படிக்கட்டுகள் இல்லை. அரசு அதிகாரிகளும் அதிகாரிகளும் அவரவர் பசியைத் தீர்க்க அலைந்து கொண்டிருந்ததால் இந்த அப்பாவி மக்களின் குரல் எங்கும் எடுபடவில்லை.
இனி யாரையும் நம்பிப் பயனில்லை என்பதால் தாங்களே ஒன்றுகூடிச் சிறு குழுவொன்றை அமைத்தார்கள். உதவும் நல்லுள்ளங்கள் சில ஆதரவுக் கரம் நீட்ட, கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தன்று தொடங்கியது இவர்கள் பணி. எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருபது நாட்களில் 7.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏரியின் நீர்வரத்துக் கால்வாயைத் தூர்வாரி முடித்துள்ள இந்தச் சாமானியர்கள் அடுத்தகட்டமாகப் பரந்து விரிந்துள்ள ஏரியில் படர்ந்துள்ள சீமைக்கருவைப் புதர்களை அகற்றி, ஏறியை ஆழப்படுத்தவும், ஏரியின் கரைகளை பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றின் உதவியுடன் இந்தப் பணியையும் சிறப்பாகச் செய்து முடிப்போம் என்று உறுதியுடன் கூறும் இவர்களது தன்னம்பிக்கை, இன்றைய இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டும் முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல. அருகிலேயே ஓடும் அய்யாற்று நீரைக் கால்வாய் மூலம் ஏரிக்குக் கொண்டுவந்தால் எங்கள் வறட்சியும் வறுமையும் காணாமல் போகும் எனக் கூறும் இக்கிராமவாசிகள், அதற்கான முன்னெடுப்பிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திட்டங்கள் என்ற பெயரில் கோடிகளைக் கணக்கில் காட்டிக் காகிதத்தில் மட்டும் நிறைவேற்றும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதில் கொஞ்சம் கிள்ளிப் போட்டாலே இந்தச் சாமானியர்களின் கனவு நனவாகி இவர்களது வாழ்வு செழிக்கும் . செய்வார்களா?
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments