125 வாரங்களாக தொடரும் உய்யக்கொண்டான் கால்வாய் தூய்மைப் பணி! கைகொடுக்குமா மாநகராட்சி?
திருச்சி மலைக்கோட்டை எப்படியோ அதே போலத்தான் 1000 ஆண்டு காலமாக பாரம்பரியமிக்க ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட உய்யக்கொண்டான் கால்வாய் திருச்சிக்கு மேலும் பெருமை சேர்த்திடும் ஒன்று.
ஆயிரம் ஆண்டுகள் பெருமைமிக்க உய்யக்கொண்டான் கால்வாய் 87 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கால்வாய் இன்றளவும் 33 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் இக்கால்வாய் பயன்பெற்று வருகின்றது.
இது ஒருபுறம் இருந்தாலும் முப்போகம் விளைந்து வந்த இந்த கால்வாய் இப்போது மூக்கை மூடிக்கொண்டு கடக்கும் அவல நிலையில், திருச்சியின் கூவம் போல மாறிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே! இந்த கால்வாயை காப்பதற்காகவும் மறு சீரமைத்து பராமரித்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திவரும் திருச்சி தன்னார்வலர்கள் குழுவான சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 125 வாரங்களை கடந்து இரண்டரை வருடங்களாக தன்னுடைய தூய்மை பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் 5 பேர் கொண்ட குழுவால் ஆரம்பிக்கப்பட்ட சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் என்னும் குழு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி உய்யகொண்டானுக்கு உயிர் கொடுத்து வந்தனர். அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணத்தின் தொடர்ச்சி இதன் 125வது வார வெற்றி விழா கண்டு தூய்மைப் பணியை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடக்கும் இந்த தூய்மைப் பணியில் திருச்சியின் சமூக ஆர்வலர்கள், சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் குழு, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தனது பங்களிப்பை உய்யக்கொண்டானுக்காக ஒவ்வொரு வாரமும் அளித்து வருகின்றனர்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும்கூட முடங்கி விடாமல் இணையதளம் வெப்னார் மூலம் உய்யக்கொண்டான் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றன! கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை பேச்சு போன்ற கலை இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகளை இணையதளம் மூலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்!
சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் குழுவினர் அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க உள்ளனர் என இக்குழுவில் சேர்ந்தார் ARCH.விஜயகுமாரிடம் பேசினோம்…" இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள��� அதிகமாக தண்ணீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்தி கண்டிப்பாக உய்யக்கொண்டானில் கலக்க விட்டு இருப்பார்கள் என்பதே நிதர்சனம்! எங்களால் ஆன விழிப்புணர்வு பணிகளை கொடுத்துக்கொண்டே தான் வந்துள்ளோம். இருந்தாலும் ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, வாழவந்தான் கோட்டை வரை உள்ள பகுதிகளில் அடுத்த கட்டமாக அதிக விழிப்புணர்வு தேவைப்படும் இடமாக உள்ளது. எனவே வருகின்ற காலங்களில் ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளைக் கேட்டு எதனால் கழிவுகளை உய்யக்கொண்டானில் கலக்க விடுகிறீர்கள்? என்ற சர்வே எடுத்து அதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளோம். திருச்சி மக்கள் மனம் வைத்தால் மட்டுமே உய்யக்கொண்டானை காக்க முடியும்.
மேலும் ஊரடங்கால் உய்யக்கொண்டான் கால்வாயில் அதிகப்படியான கோரை புதர்கள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து விட்டனர்.வருகின்ற காலங்களில் பாசனம் உதவிக்காக நீர் திறந்து விடும் நிலையில் இவற்றை அகற்ற தொடர்ந்து திருச்சி மாநகராட்சியின் ஒத்துழைப்பும் பொதுப்பணித்துறையின் ஒத்துழைப்புயும் எதிர்பார்க்கிறோம்! என்றார்
இன்றைய உலக சுற்றுச்சூழல் தினத்தில் நம்முடைய திருச்சியின் உய்யக்கொண்டானின் சுற்றுச்சூழலை காப்பதற்காக களத்தில் நின்று போராடும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.