1000 கிலோமீட்டர் கடந்து திருச்சி வந்த இளைஞர்கள்! உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!! உதவிய தன்னார்வலர்!!
இந்தியாவில் கொரோனோ நோய்த்தொற்று தாக்கத்தாலும், 144 தடை உத்தரவு காரணத்தினாலும் இன்றளவும் பல மாநிலங்களில் பலர் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் அங்கிருந்து கடந்து வந்து தற்போது திருச்சியை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த இளைஞர்கள் கூறியபோது "மகாராஷ்டிராவில் இருந்து தமிழக அதிகாரிகளை எவ்வளவோ முறை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது பயன் இல்லை. எனவே கடந்த மாதம் 29ம் தேதி அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியில் அங்கு உள்ளவர்கள் தங்களுடைய வாகனங்களில் அழைத்து உதவி புரிந்தார்கள். தமிழகத்திற்குள் வந்தும் உதவி கேட்டும் பயனில்லை. தமிழகத்திற்கு அம்மாநிலங்கள் எவ்வளவோ மேல். கொரோனா நோய் தொற்றில் மகாராஷ்டிரா தான் முதல் மாநிலமாக இருந்ததால் நாங்கள் எப்படியாவது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது" என்கின்றனர்.
சுமார் 1000 கிலோ மீட்டர் நடந்து வந்து கொண்டிருந்தவர்களை திருச்சியில் இவர்களை அருண் குமார் என்னும் தன்னார்வலர் சந்தித்தார். இதுகுறித்து அருண் அவர்கள் கூறியதாவது;
"திருச்சி திருவானைக்கோவில் காவிரி பாலத்தில் இன்று மதியம் ஏழு இளைஞர்கள் பேக்குடன் வரிசையாக செல்வதை கண்டேன். உடனடியாக அவர்களிடம் சென்று எங்கிருந்து வருகிறீர்கள்! எங்கு செல்லவேண்டும்,இந்த வெயிலில் எங்கு போகிறீர்கள்!! என்று கேட்டேன். நாங்கள் திருவாரூர், நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் கிளம்பி ஒரு வாரம் ஆகிறது மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து வந்து கொண்டிருக்கிறோம். வரும் வழியில் வாகனங்களை தேக்கி இங்கு வந்துவிட்டோம் என்றார்கள். நடக்கமுடியாமல் நடந்து வருவதை பார்த்து நான் திருச்சி ஆட்சியர் சிவராசுவிடம் தொடர்புகொண்டு விவரங்களைக் கூறினேன். பின்பு வட்டாட்சியர், துணை கலெக்டர் நேரில் வந்து இளைஞர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதி அளிக்கப்பட்டது. பின்பு இவர்களை நானே அழைத்துச்சென்று இவர்களுடைய ஊரில் விடுவதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். பின்பு ஆட்சியர் சிவராசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இளைஞர்களை நானே அழைத்து சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.
இந்த சமுதாயத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தாலும் நடக்காததுபோல் கண்டுகொள்ளாமல் வாழ்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் தாமாக முன்வந்து இளைஞர்களுக்கு உதவியளித்தது என்பது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திருச்சியின் தன்னார்வலர் அருண்குமார் அவர்களுக்கு TRICHY VISION சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!