"உண்மையான கொரோனா பாதிப்பை கண்டறிய திருச்சியில் சீரோ சர்வே நடத்த வேண்டும்" - ஆட்சியரிடம் கோரிக்கை!!
உண்மையான கொரோனா பாதிப்பை கண்டறிய திருச்சி மாநகராட்சியில் சீரோ சர்வே (Serological Survey) நடத்தவேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் சீரோ சர்வே என்ற ஆய்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகரங்களில் வசிக்கும் மக்களின் ரத்த மாதிரி, சளி மாதிரி பரிசோதிக்கப்படும். ஆர்.டி பிசிஆர் கருவிகள் மற்றும் எலிசா ஆண்டிபாடி உபகரணம் மூலம், ஒருவரின் உடலில் கொரோனா தொற்று உள்ளதா? அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டு அழிந்து விட்டதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டுபிடிக்கப்படும். இதன் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என இந்த சீரோ சர்வே ஆய்வு செய்யப்படும்.
இதன்படி சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சீரோ சர்வேயில் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனையில் அவர்களில் 21 விழுக்காட்டினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், சென்னையில் வசிக்கும் 80 விழுக்காட்டினர் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் இந்த சீரோ சர்வே சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இந்த சீரோ சர்வே ஆய்வினை மேற்கொள்ள வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் வழி கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
சட்ட பஞ்சாயத்து இணை செயலாளர் ரங்க பிரசாத் கூறுகையில்…" உண்மையான கொரோனா பாதிப்பை கண்டறியவும், இதுவரை எத்தனை பேருக்கு அவர்களுக்கே தெரியாமல் கொரோனா வந்து சென்றிருக்கிறது, திருச்சியில் உள்ள நான்கு மண்டலங்களாக அரியமங்கலம், அபிஷேகபுரம் ஸ்ரீரங்கம், பொன்மலை ஆகிய மண்டலங்களில் அதிகமான நோய் தொற்று பாதித்த பகுதிகளில் இந்த சீரோ சர்வே ஆய்வை எடுப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்" என்றார்