Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள்: தமிழக அரசின் புதிய திட்டம் தொடக்கம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி

மாவட்டத்தில் முதல் கட்டமாக 18,985 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிடும் வகையில் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப.அவர்கள், மாண்புமிகு மாநராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி.ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப.அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.சௌந்தரபாண்டியன், திரு.செ.ஸ்டாலின் குமார்,

திரு.எம்.பழனியாண்டி, திரு.பி.அப்துல்சமது ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என எண்ணற்ற பல திட்டங்கள் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2022 முதல் 2026 ஆம் ஆண்டு வரை புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 42699 கல்லூரி படிப்பிற்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000/-வீதம் வழங்கப்பட்டு வருகிறது, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரை 25450 கல்லூரி படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 18 பொறியியல் கல்லூரிகள், 20 பாலிடெக்னிக் கல்லூரிகள், 22 கலை (ம) அறிவியல் கல்லூரிகளில் பயின்ற 153433 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், வேலைவாய்ப்பிற்காக தனித்திறன், நேர்முகத் தேர்வு பயிற்சி போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் வாயிலாக முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் 13522 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, கல்வியில் சிறந்த தமிழ்நாடாக திகழும் நமது மாநிலத்தில் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல், பொறியியல் மருத்துவம், விவசாயம், பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த மடிக்கணினி வழங்குவதால், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும். இணையதளத்தில் நூல்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறவும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் சார்ந்த கல்வி புலத்தில் நிபுணத்துவம் பெறவும், தற்போதைய செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தவும், தரவு பகுப்பாய்வுகளை பெறவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அது மட்டுமன்றி, இத்திட்டத்தால் தமிழ்நாட்டில் நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் சென்று சேரவும் இத்திட்டம் உறுதுணையாக அமையும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, தோட்டக்கலைக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தற்போது 18985 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. 2-ம் கட்டமாக இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும். அதற்கு அடுத்த கட்டமாக தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த முன்னோடி திட்டத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் நல்ல முறையில் மடிக்கணினியை பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், பயன்பெறவுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அங்கம்மாள், பேராசிரியர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *