Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி திமுக உட்கட்சி பூசலில் பறக்க போகும் பிரம்மாண்டமான கொடி

திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், முன்னாள் கம்பரசம்பேட்டை ஊராட்சிமன்ற தலைவரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான இருந்தவர் குடமுருட்டி சேகர். 15 வருடத்திற்கு மேலாக திமுக மாவட்ட துணை செயலாளராக இருந்த அவர், தற்பொழுது எந்த பதவிகளிலும் இல்லை. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இரு அணியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி சேகரின் பதவியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறித்து விட்டதாகவும், அந்தப் பதவியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளருக்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ” உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால்தான் பலனுண்டு. கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பயனில்லை ” என்ற அறிஞர் அண்ணாவின் வசனத்துடன் குடமுருட்டி சேகர் ஒரு பேனர் வைத்திருந்தார் இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் குடமுருட்டி பாலம் அருகே சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு குறித்த பேனர் குடமுருட்டி சார்பில் நீண்ட நாட்களாக அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த பேனரை மறைத்து வைத்து திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதவாளர்கள் பேனர் வைக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடமுருட்டி சேகர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குடமுருட்டி. சேகர் பேசியது…… திருச்சி மாவட்டத்தை 3.மூன்றாக பிரித்ததால் திமுகவினர் இடையே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் , பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கக்கூடிய அன்பில் மகேஷ் தான் காரணம். திருச்சியில் திமுக கட்சியை தனது உதவியாளரிடம் விற்று விட்டார் அமைச்சர் மகேஷ். அமைச்சருக்கும், அவரது உதவியாளர்களுக்கும் கைத்தடியாகவும், எதிர்த்துப் பேசாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படுகிறது. திமுகவில் உண்மையாக உழைத்தவர்கள், யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. திமுக கட்சியை வளர்க்கிறேன் என்று சொல்லி மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதே வழக்கமாக வைத்துள்ளார்கள்.

திமுக கட்சியில் கடந்த 40 வருடங்களாக உண்மையாக உழைத்து, விசுவாசியாக இருந்து பல்வேறு வழக்குகளை சந்தித்த எனக்கு எந்த மரியாதையும் பதவியும் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் நேரு ஸ்டாலின் ஆதரவாளராக இருக்கிறார், அதேபோன்று உதயநிதி ஆதரவாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் இருக்கிறார். திருச்சி திமுக கட்சியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தலைமை இடத்திற்கு கொண்டு செல்லாமல் இவர்கள் மூடி மறைக்கிறார்கள், காரணம் என்ன என்றே தெரியாமல் நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.  திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய உதவியாளர் அருண் ஆகிய இருவர்களால், கட்சியின் மூத்த நிர்வாகிகள், உண்மையான பலர் விசுவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தனது நெருங்கிய உறவினரான அன்பில் பெரியசாமி, அவர்கள் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தற்போது அவர் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு அன்பில் மகேஷ் ஓரங்கட்டி வைத்துள்ளார். சொந்த சித்தப்பாவையே கட்சியிலிருந்து ஓரம் கட்டிய அமைச்சர் மகேஷ். அமைச்சர் உதயநிதியின் ஆதரவுடன் அன்பில் மகேஷ் இத்தகைய தவறான போக்கில் நடந்து கொள்கிறார். திருச்சி மாவட்டத்தில் கட்சியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தலைமை கழகம் அழைத்து முறையாக விசாரணை நடத்தி தீர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். அமைச்சர் நேரு அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம் திருச்சியில் திமுக கட்சியை தனது உதவியாளர் அருண் மற்றும் அவருடைய மாமா மதிவானணிடம் விற்றுவிட்டு அராஜகபோக்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்படுகிறார்.

திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் இத்தகைய பிரச்சனை ஏற்பட்டிருக்காது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அடிப்படைத் தொண்டனை அழைத்து பேசுவார் ,அந்த நடவடிக்கை தான் தற்போது நாங்கள் விரும்புகிறோம் ஆனால் அது நடக்கவில்லை.  திடீரென்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று அமைச்சரான அன்பில் மகேஷ், 40 வருடங்களாக கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரான அன்பில் மகேஷ்க்காக திமுக தலைமை கழகம் மௌனம் காத்தால் கட்சி எப்படி வளரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன கூறினாலும் கட்சியில் இருக்கக்கூடிய மாவட்டத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே உண்மையாக உழைக்கக்கூடிய தொண்டர்களுக்கு எந்த பொறுப்புகளையும் வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாளை திருச்சி வரவுள்ள நிலையில் தற்போது இந்த உட்கட்சி பூசல் வெளிப்படையாக தெரிந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *