போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை என தமிழக டி.ஜி.பி. அறிக்கை அளித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது சம்பந்தமான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்கும்படி, எஸ்.பி.சி.ஐ.டி – ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் போலி பாஸ்போர்ட் பெற உதவியதாகவும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசாருக்கு எதிராக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கை மனுவின் அடிப்படையில் டி.ஜி.பி. விசாரணை நடத்தினார். பின்னர், ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த தகவல் கடந்த செப்டம்பர் மாதமே மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், அரசு கடிதம் கிடைத்ததா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதுகுறித்த தகவல்களை கேட்டு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 31ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.




            
            
            
            
            
            
            
            
            
            
Comments