Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

14 ஆண்டுகள் நிறைவு செய்தும் முடிவுக்கு வராத திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்

14 ஆண்டுகளை நிறைவு செய்தும், 5 முதல்வர்களைக் கடந்தும் முடிவுக்கு வராத திருச்சி விமானநிலைய ஓடுதள விரிவாக்கம். இன்று 10.01.2024 ல், 14 ஆண்டுகளை நிறைவு செய்து, 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திருச்சி விமானநிலைய ஓடுதள விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தல். இதைப்பற்றி காண்பதற்கு முன்னர் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, ஒரு விமானநிலையமே எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு, இந்தியாவின் முதல் தனியார் விமானநிலையம், இந்தியாவின் முதல் பொதுமக்கள் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்த திட்டம் (Public Private Partnership Model – PPP Model), இந்தியாவின் மிகப்பெரிய அதே சமயத்தில் சிக்கனமான (Cost) திட்டம், இங்கிலாந்தின் ஹார்வார்டு பல்கலைக்கழகமே வியந்த திட்டம், இன்றயவும் உலகின் மிகச்சிறந்த PPP திட்டம் என்ற முன்னுதாரன படிப்பு (Case Study) என இன்று இந்தியாவின் மிகப்பெரிய விமானநிலையங்களுள் ஒன்றாக ஒரு விமானநிலையம் வந்தது எப்படி என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம். 

அந்த பெருமைமிகு விமானநிலையம் கொச்சி பன்னாட்டு விமானநிலையம் ஆகும். 1990களில் கல்ப் நாடுகளுடனான மக்கள் போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக அப்போது வெலிங்டன் தீவில் கடற்படை தளமாக இருந்த சிறிய கொசசி விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டிய சூழல். ஆனால் அதற்கு கடற்படை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அப்போது எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக இருந்த V.J.குரியன் அவர்கள் எண்ணத்தில் உதித்ததுதான் புதிதாக விமானநிலையத்தை கட்டும் திட்டம். இந்த ஆலோசனை உடனடியாக அப்போதைய கேரள முதல்வர் K.கருணாகரன் அவர்களிடம் செல்கிறது. அவரும் உடனே அதை ஆமோதித்து, V.J.குரியன் அவர்களையே கொச்சி விமானநிலைய திட்டஅதிகாரியாக நியமனம் செய்கிறார். கொச்சி மாநகராட்சியால் வழங்கப்பட்ட ஒரு இடம், வெறும் 20,000 பணத்தை மட்டுமே வைத்து V.J.குரியன் அவர்கள் கொச்சி விமானநிலைய திட்டத்தை தொடங்குகிறார். (கவனிக்க, இன்றைய கொச்சி விமானநிலைய வரலாறே வெறும் 20,000 பணத்திலும் V.J.குரியன் அவர்களிடமே இருந்து தொடங்குகிறது). புவியியல் அமைப்புபடி பல இடங்களைப் பார்த்து, தற்போதுள்ள நெடும்பாச்சேரி இடம் விமானநிலையத்திற்காக தேர்வு செய்யப்படுகிறது. 

இடம் தேர்வு செய்தாயிற்று எவ்வாறு கையகப்படுத்துவது?

தேர்வு செய்யப்பட்ட இடம் 1,253 ஏக்கர், 3,824 நில உரிமையாளர்கள், 822 வீடுகள், 33 செங்கல் மற்றும் சுண்ணாம்பு சூளைகள், 3 கசிவுநீர்க் குட்டைகள், வருடம் 365 நாளும் தண்ணீர் செல்லும் செங்கல்தோடு கால்வாய், 110 KVA உயர் மின் அழுத்த மின் வழித்தடம், 3 கோவில்கள், 2 சர்ச்சுகள். இவற்றை என்ன செய்வது?

கொச்சி விமானநிலைய திட்ட அறிக்கை படி, திட்டத்தின் மதிப்பு 200 கோடி. நிதி ஆதாரத்திற்கு என்ன செய்வது? கேரளாவின் HUDCO நிபந்தனைகளுடன் உதவி செய்ய வருகிறது. நிதி திரட்டுகிறார் V.J.குரியன். திட்டத்தை கேள்விப்பட்டு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாக 10 லட்ச ரூபாய் தருகிறார் தொழில்அதிபர் ஜோஸ் மலியக்கல். இயன்ற அளவு முயன்றும் வெறும் 4.45 கோடி மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஆனாலும் சோர்ந்து விடவில்லை திட்ட அதிகாரியான V.J.குரியன். மாற்றுவழியான பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டம் – Public Private Partnership – PPP என்று மாறறப்பட்டு மீண்டும் முதல்வர் ஒப்புதல் பெறப்படுகிறது. விசயத்தை கேள்விப்பட்டு V.J.குரியனுடன் கைகோர்க்கிறார் பிரபல லூலூ M.A.யூசுப் அலி. லூலூ M.A..யூசுப் அலி திட்டத்தில் இணைந்த உடன் அவரது தொழில் நேர்த்தி மற்றும் வெற்றியின் காரணமாக திட்டத்தின் மேல் பொதுமக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை பிறக்கிறது. திட்டமானது அடுத்த கட்டத்திற்கு வேகமெடுக்கிறது. கல்ப் பிரபலங்கள் C.V.ஜேக்கப், N.V.ஜார்ஜ், P.முகம்மது அலி, E.M.பாபு என வரிசையாக திட்டத்தில் இணைய ஆரம்பிக்கின்றனர்.

இந்நிலையில் அன்றைய எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் K.V.தாமஸ் அவர்கள் அன்றைய மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாதவராவ் சிந்தியா அவர்களிடம் திட்டத்தின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை விளக்கி திட்ட அனுமதியை வாங்குவதில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அதேபோல் நெடும்பாச்சேரி சட்டமன்ற உறுப்பினர் T.M.ஜேக்கப் அவர்கள் திட்டத்தலைவர் V.J.குரியன் அவர்களுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணித்து கொச்சி விமானநிலைய திட்டத்தில், குறிப்பாக நிலமெடுப்பு விசயத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார். 

இப்படி பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் கடந்த (21.08.1994)ல் கொச்சி விமானநிலைய திட்டத்திற்கு அன்றைய கேரள முதல்வர் K.கருணாகரனால் அடிக்கல் நாட்டப்படுகிறது. பின்னர் அரசியல் மாற்றங்களால் A.K.ஆண்டனி முதல்வர் ஆகிறார். அரசியல் வேறு; மாநிலஅரசின் வளர்ச்சித்திட்டங்கள் வேறு என்பதை நன்குணர்ந்த A.K.ஆண்டனி தொடர்ந்து தன்னுடைய ஆதரவை கொச்சி விமானநிலைய திட்டத்திற்கு அளிக்கிறார்.

இதற்கிடையில் கொச்சி விமானநிலைய திட்டத்திற்கு எதிராகவும், இதற்கான நிலம் கையகப்படுத்தல் தொடர்பாகவும் 1,003 வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது. 53 ஒரிஜினல் பெட்டிசன்கள் முன்சீப் கோர்ட்டில் தொடங்கி, 583 அப்பீல் வழக்குகள் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. 116 SLP (Special Leave Petition) டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்யப்படுகின்றது. 

இவ்வளவு வழக்குகளை கையாண்டு திட்டத்தை செயல்படுத்துவது எப்படி?

விசயத்தை கேள்விப்பட்டு V.J.குரியனுடன் கைகோர்க்க ஓடோடி வருகிறார் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திருமதி I.C.அன்னா. பாலகிருஷ்ணன், ராமன் நாயர் என்ற இரு உதவியாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு வீடாகப்போய் திட்டத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கி நில உரிமையாளர்களை சம்மதிக்க வைக்கிறார். பல வழக்குகளை திரும்பப்பெற வைக்கிறார். நீதிமன்றங்களிலும் பல வழக்குகளை தள்ளுபடி செய்ய வைக்கிறார். கொச்சி விமானநிலையத்திட்டம் படிப்படியாக முன்னேறுகிறது. இந்நிலையில் கேரளாவில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு E.K.நாயனார் முதல்வராகிறார். அவர் முதல்வரானவுடன் வழக்குகளை தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டுகிறார். அவரது முயற்சியின் பலனாக, 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்படுகிறது.

விமானநிலையத்திற்கு நிலம் கொடுத்தோர் மற்றும் இழப்பீட்டாளர்களுக்கு நியாயமான இழப்பீடு, விமானநிலையத்தில் வேலை, விமானநிலையத்தில் தொழில் செய்ய அனுமதி, வாடகை ஊர்திகள் இயக்கிக்கொள்ள அனுமதி, வீடு இழந்தோர்களுக்கு மாற்று வீடு என மிகவும் நியாயமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்தது கொச்சி விமானநிலைய திட்டக்குழு.

3 கிராம சாலைகள் மற்றும் 2 மாவட்ட சாலைகளை மாற்று வழியில் திருப்பி பொதுமக்களின் வசதி காக்கப்பட்டது. மிகவும் பொருட்செலவிலும் மிகுந்த முயற்சியிலும் 110 KVA HT line, உயர் மின் அழுத்த மின்வழித்தடமானது விமானநிலையத்தில் இருந்து 10,000 அடி தொலைவில் மாற்றி அமைக்கப்பட்டது. நெடும்பாச்சேரி பகுதி மக்களின் நீர் ஆதாரமான செங்கல்தோடு வாய்க்கால் யாருக்கும் பாதிப்பு இன்றி மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு கால்வாயும் நீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட்டது. 3 கோவில்கள் 2 சர்ச்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. திட்டம் தொடர்ந்து வீறுநடை போடுகிறது. இறுதியாக,ஒட்டுமொத்த கேரள மக்களின் உணர்ச்சிப்பூர்வமான தருணமான (25.05.1999) அன்று E.K.நாயனார் தலைமையில் கொச்சி விமானநிலையம் திறப்பு விழா காண்கிறது.

இன்று பல பெருமைகளுடன் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் பன்னாட்டு விமானப் போக்குவரத்திற்கே சவால்விடும் நிலையில் உயர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தில் மேலம் பல சாதனைகளைச் செய்யும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டின் இது போன்ற பல்வேறு சாதனைகள் திருச்சி விமான நிலையம் செய்து வரும் நிலையில்ஓடுதள விரிவாக்கம்  பெறாமல் இருப்பதன் காரணம் குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம் ….

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *