பால் உற்பத்தியாளர் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்,
பால்வளத் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.திருச்சி மாவட்டத்தில் தாட்கோ உள்ளிட்ட திட்டங்கள் மூலக் மானிய கடன், காலநடை பராமரிப்பிற்கான வட்டியில்லா கடன் உதவி, புதிய கறவை மாடு வாங்குவதற்கான கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படும்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை படிப்படியாக கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டை பெருக்கி அதில் கிடைக்கக்கூடிய லாபத்திலிருந்து ரூ. 3.11 கோடி கூடுதல் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அத்தியாயம். விவசாயிகளுக்கு பாலுக்கு ஊக்கத்தொகை 3 ரூபாயும் அதில் சிறப்பான பாலுக்கு கூடுதலாக ஒரு ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில் உற்பத்தியை பெருக்கி இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு என கணக்கீட்டு ரூ.3.11 கோடி கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியை பெருக்குவதோடு கட்டமைப்புகளையும் பெருக்குவதற்கான நடவடிக்கைகள எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 16.50 லட்சம் லிட்டம் பாலை கையாளும் திறன் அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தீவனங்கள் தயாரிப்பதற்கு 350 மெட்ரிக் டன் தீவன உற்பத்திக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 600 மெட்ரிக் டன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு டிசம்பருக்குள் அது முடிவடையும்.
விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களையும் இணைத்து மேலும் பல பணிகளை செய்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறோம்.கள் என்பது பனை மரத்தில் இருந்து வரும் பால் என சீமான் பேசியது குறித்த கேள்விக்கு கள் என்பது கள் தான். விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால் அதை சீமான் மிகைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. கால்நடைகள் வளர்ப்பதும் பனை ஏறுவதும் கேவலமா என சீமான் கேட்கிறார் அந்த தொழில்களை யாரும் கேவலம் என கூறவில்லை.
எங்களின் கொள்கை சமூக நீதி கொள்கை, சமத்துவக் கொள்கை தாழ்ந்து கிடக்கும் மனிதர்களை உயர்த்த வேண்டும் என்கிற கொள்கை. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம் அவர்கள் கல்வி கற்று விட்டு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்நுட்பங்கள் வந்துள்ளது அந்த தொழில்நுட்பங்களின் பயன்களையும் அவர்கள் பெற வேண்டும். ஆனால் சீமான் பேசுவதை பார்க்கும் போது மக்களை மீண்டும் மனு ஸ்மிருதி காலத்திற்கு அழைத்து சென்று குலத் தொழிலை செய்ய வேண்டும் என்கிற தொனியில் பேசுவதாக உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமூகத்திற்கு கல்வி அடிப்படையாக தேவை என நம் தலைவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.
சிபில் ஸ்கோர் விவகாரத்தை நிவர்த்தி செய்து வருகிறோம். கடன் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவது போல் கடனை திருப்பி செலுத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
Comments