Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துபாயில் தவித்த 5 தமிழர்கள் மீட்பு: திருச்சி எம்பி துரை வைகோ நடவடிக்கை!

துபாய்க்கு எலக்ட்ரீஷியன் பணிக்குச் சென்றுவிட்டு, ஊதியமும் இன்றி, பாஸ்போர்ட்டையும் இழந்து தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்களை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியோடு மீட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பவுன்ராஜ், அழகுராஜ், இராமசாமி, கணேசன், சரவணன் ஆகிய ஐந்து தமிழர்கள் எலக்ட்ரீஷியன் பணிக்காக துபாய் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனம் முறையாக ஊதியம் வழங்காததால், அது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு எவ்வித பதிலும் வராத நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் துபாயில் உள்ள தொழிலாளர் உதவி மையத்தை நாடினர். இதனால் கோபமடைந்த அந்நிறுவனம், தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்காமல், எவ்வித இழப்பீடும் அல்லது செய்த வேலைக்கான ஊதியமும் தராமல், அவர்களை வேலையிலிருந்து நீக்கி தெருவில் விட்டுள்ளது. இதனால் உணவுக்கும் தங்குமிடத்திற்கும் வழியின்றி அவர்கள் துபாயில் சிக்கித் தவித்தனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களின் துயர நிலை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவி கோரினர். இந்த விவகாரத்தை உடனடியாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற துரை வைகோ எம்பி, அவர்களுக்குத் தற்காலிகப் பாஸ்போர்ட் வழங்கி, துபாயிலிருந்து பத்திரமாகத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதற்கிடையில், மறுமலர்ச்சி திமுகவின் இணைய அணிப் பொறுப்பாளர் மினர்வா ராஜேஷ், இசக்கி, சிவப்பிரகாசம், KNA அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர் கள்ளக்குறிச்சி மகேஷ் ஆகியோரின் உதவியோடு, பாதிக்கப்பட்ட ஐந்து தமிழர்களுக்கும் தற்காலிகத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் துபாயில் பூர்த்தி செய்யப்பட்டன.

தற்போது அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்து, பாதிக்கப்பட்ட 5 தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தங்களை மீட்டதற்காக பாதிக்கப்பட்ட ஐவரும் துரை வைகோ எம்பிக்கு நன்றி தெரிவித்துக் காணொளி (Video) ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மறுமலர்ச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ விடுத்துள்ள அறிக்கையில்:
“பாதிக்கப்பட்ட ஐவரும் பத்திரமாக வீடு திரும்பினால் அதுவே எனக்குப் போதும். அதுதான் எனக்கு முழு மனநிறைவைத் தரும். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஒன்றிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், துபாயில் உடனடியாக உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்று, இதுவரை வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். என் தொகுதி மக்களுக்காகக் கடமையாற்றுவதைப் போலவே, வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்வதும் எனக்கு மிகுந்த மனநிறைவையும் உந்துசக்தியையும் தருகிறது. இந்த மக்கள் பணி என்றென்றும் தொடரும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *