Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட காவல்துறையின் ஓராண்டு அதிரடி சாதனைகள்: காவல் கண்காணிப்பாளர் அறிக்கை!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செ. செல்வநாகரத்தினம் , இகாப கடந்த 06.01.2025 முதல் பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறார். அவரது வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், சிறப்பான திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு போக்கிரிகள் மற்றும் தொடர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டில் 420 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், 2025-2026 ஆம் ஆண்டுகளில் ரவுடி, திருட்டு, கஞ்சா விற்பனை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட 505 குற்றவாளிகள் புதிதாக கண்டறியப்பட்டு அவர்கள் மீது சரித்திர பதிவேடுகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் 73 கொலை குற்றவாளிகளும், 55 போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளும் அடங்குவர். இதன் மூலம் தற்போது மொத்தம் 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட 119 நபர்கள் மீது 2025-ம் ஆண்டிலும், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இது நாள் வரை 49 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த 10.05.2026 அன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 364 முக்கியமான சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு முதல் முறையாக ஆஜர் அணிவகுப்பு (HS Parade) நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் கொலை மற்றும் திருட்டு குற்றங்களைக் குறைப்பதிலும், களவுபோன சொத்துக்களை மீட்பதிலும் காவல்துறை மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த 2024-ல் 40 ஆக இருந்த கொலை வழக்குகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக 2025-ல் 34 ஆகவும், 2026-ல் 13 ஆகவும் குறைந்துள்ளன; மேலும் இந்த ஆண்டு பதிவான வழக்குகளில் தொடர்புடைய 44 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில சந்தேக மரண வழக்குகள் கூட தீவிர

புலன்விசாரணைக்குப் பின் கொலை வழக்குகளாக மாற்றம் செய்யப்பட்டு, குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டில் 542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42% சொத்துக்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், 06.01.2025 முதல் தற்போது வரை 641 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 685 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முன்னெப்போதும் இல்லாத அளவாக 87% வழக்கு சொத்துக்கள் (மதிப்பு ரூ.11,86,30,889/-) மீட்கப்பட்டுள்ளன. இதில் சமயபுரம், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதிகளில் நடைபெற்ற முக்கிய கொள்ளை வழக்குகளில் களவு போன 25 கிலோ அளவிலான தங்க நகைகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது முதன்மையான சாதனையாகும்.

நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதிலும் திருச்சி மாவட்ட காவல்துறை சிறந்து விளங்கியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2208 வழக்குகளில் (12 கொலை, 7 போக்சோ, 4 கற்பழிப்பு, 7 கொலை முயற்சி, 5 கொள்ளை, 4 கடுமையான வீடுபுகுந்து திருட்டு மற்றும் 2169 இதர வழக்குகள்) தண்டனை பெற்றுத் தரப்பட்டது. ஆனால், 2025-2026 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து, மொத்தம் 10,036 வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 30 கொலை வழக்குகள், 35 போக்சோ வழக்குகள், 2 கற்பழிப்பு வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள், 22 கொள்ளை (Robbery) வழக்குகள், 2 கடுமையான வீடுபுகுந்து திருட்டு (Grave Burglary) வழக்குகள், 1 கடுமையான திருட்டு (Grave Theft) வழக்கு மற்றும் 9938 இதர வழக்குகள் அடங்கும்.போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 111 கஞ்சா மற்றும் 420 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80.630 கிலோ கஞ்சாவும் 2222.220 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 06.01.2025 முதல் தற்போது வரை 394 கஞ்சா வழக்குகள் மூலம் 317.595 கிலோ கஞ்சாவும், 1786 குட்கா வழக்குகள் மூலம் 9795.170 கிலோ குட்காவும் கைப்பற்றப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 339.141% கூடுதலாகும். சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்தல், விபத்துப்பகுதிகளில் (Hotspot) தனி கவனம் செலுத்துதல் மற்றும் இரவு நேர ஒளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2025 முதல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது 5,21,864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,95,18,000/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றங்களைக் கண்காணிக்க நகரின் முக்கிய பகுதிகளில் 2,281 புதிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், நடமாடும் வாகனத் திரை மூலமாகப் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடும்ப வன்முறைகள் குறித்து 2025 முதல் தற்போது வரை 47,284 விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின்அலைபேசிகளில் ‘காவலன் உதவி ஆப்’ குறித்து விளக்கி கூறி, 48,233 நபர்களின் அலைபேசியில் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் மாநில அளவில் திருச்சி மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. குற்றவாளிகளைக் கண்காணிக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை எந்நேரமும்

கண்காணிக்கும் பொருட்டு, திருச்சி அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையுடன் இணைந்து “கருடன்” எனும் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு 03.10.2025 முதல் செயல்பாட்டில் உள்ளது. அவசர காலத்தில் பொதுமக்கள் காவல்துறையை அணுக ஏதுவாக, டால்மியா சிமெண்ட் ஆலையின் CSR நிதி பங்களிப்புடன் கொள்ளிடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் CCTV கண்காணிப்பு வசதியுடன் கூடிய “காவலர் உதவி மையம்” (Police Assistance Booth) அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு உத்தரவுப்படி ஆயுதப்படை வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் “காவலர் மன்றம்” அமைக்கப்பட்டு, கடந்த 25.02.2026 அன்று மாலை காவல் கண்காணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது. இம்மன்றத்தில் புத்தகங்கள், செஸ், கேரம், வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்களும், கிரிக்கெட் மற்றும் பேட்மிட்டன் மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆயுதப்படை குடியிருப்பில் போதிய இடவசதியின்றி இருந்த காவலர் மருத்துவமனை, GVN மருத்துவமனையுடன் இணைந்து தனி மருத்துவர் அறை மற்றும் 5 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, 26.05.2026 அன்று காவலர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து

வைக்கப்பட்டது. மேலும், மெச்சத்தகுந்த நடவடிக்கையாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்த சுமார் 38.5 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான (முதலில் 21 டன் 220 கிலோ, பின்னர் 17.544 டன்) பழைய தேவையற்ற காகிதங்கள் புகழூர் காகித ஆலைக்கு அனுப்பப்பட்டு, அதற்குப் பதிலாக மொத்தம் 2080 ரிம் ஜெராக்ஸ் பேப்பர்கள் பெறப்பட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் பேப்பர் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, குற்றச்செயல்களைத் தடுக்கவும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் 4 நான்கு சக்கர வாகனங்கள், 45 இருசக்கர வாகனங்கள், 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் 13 நிரந்தர சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் பெண் காவலர்கள் இரவு ரோந்துப் பணியில் நியமிக்கப்பட்டுப் பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் களையப்பட்டு வருகின்றன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *