தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (NH-83) அமைந்திருக்கும் மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா, சாலை, ரயில், விமானம் மற்றும் துறைமுக வசதிகள் வாயிலாகச் சிறந்த போக்குவரத்து இணைப்பைப் பெற்றுத் திகழ்கிறது.
மொத்தம் 1,097.36 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இத்தொழிற்பூங்கா, உணவு பதப்படுத்துதல் மற்றும் பொதுப் பொறியியல் சார்ந்த தொழில்துறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்தப் பரப்பளவில், 840.09 ஏக்கர் நிலம் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது; இதில், 30 தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக, இத்தொழிற்பூங்கா வளாகத்திற்குள் சுமார் 17,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் தொழில்துறை வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அங்குள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், மழைநீர் வடிகால்கள், குடிநீர் விநியோக அமைப்புகள், விரிவான சாலை வசதிகள், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் விநியோக ஏற்பாடுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், LED தெруவிளக்குகள் மற்றும் உயரமான கம்பங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்கு வசதிகள் (High mast lighting) ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தொழில் துறை சூழலை புரிந்து கொள்ளவும், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி சாத்தியக் கூறுகளை மதிப்பிடவும் சிப்காட் தொழில் பூங்காவில் நிலம் பெற்ற நிறுவன பிரதிநிதிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவது குறித்து மாண்புமிகு அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை அமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
அக்கோரிக்கைகளை மிக விரைவாகத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.
தொழில்துறையினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அப்பிராந்தியத்தில் உள்ள ஐ.டி.ஐ (ITI) மையங்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ‘தொழில்துறை- கல்வி நிறுவனக் கூட்டு முயற்சி’ வாயிலாக உள்ளூர் இளைஞர்களுக்குத் தொழில்துறை சார்ந்த புதிய திறன்களைக் கற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகளையும் அமைச்சர் முன்மொழிந்தார்.

தொழில்துறைப் பணியாளர்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த தற்போதைய நிலையை ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் பணி நியமனத் முகாம்களை நடத்துவதற்குத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இத்தொழிற்பூங்கா வளாகத்திற்குள் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த வசதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்புகள் தேவைப்படுவதாக நிறுவனப் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான தகுந்த

உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
பல்வேறு சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதில் தொழிற்சாலைகள் சந்திக்கும் காலதாமதங்களை கவனத்தில் கொண்டதோடு, சேவை கோரிக்கைகள் மற்றும் ஒப்புதல்களை விரைந்து பரிசீலித்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், தொழிற்பூங்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் பசுமையாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட நிலையான வளர்ச்சி முன்னெடுப்புகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.
உலகத்தரம் வாய்ந்த தொழில்சார் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதிலும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மாநிலம் முழுவதும் உள்ள தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் தமிழக அரசு கொண்டுள்ள உறுதியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். ஏ. ராமன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன், இ.ஆ.ப., மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் R. கதிரவன் , முசரி சட்டமன்ற உறுப்பினர் M. விக்னேஷ் , சிப்காட் உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments