சோழர்களின் கல்வெட்டுகள் அடங்கிய சோழமாதேவி ஸ்ரீ கைலாயமுடையார் கோயில்!

சோழர்களின் கலைத்திறமையை பறைசாற்றும் தஞ்சை கோயிலுக்கு முன்பே கட்டப்பட்ட கோவில் திருச்சி மாநகரில் அமைந்துள்ளது .
அக்கோயிலின் சிறப்பு பற்றி இப்பதிவில் காண்போம்
சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில் திருச்சிக்கு அருகில் சோழமாதேவி என்னும் ஊரில் உள்ள கோயிலாகும். இராசராசசோழனுக்கு பல தேவியர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் சோழமாதேவி என்பவர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆடவல்லான், ரிஷபவாகனர் போன்ற செப்புத்திருமேனிகளை செய்தளித்துள்ளார்
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் திருவெறும்பூரிலிருந்து தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் சோழமாதேவி என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனான ஸ்ரீகயிலாயமுடையார், ஸ்ரீகைலாசர் பரமேசுவரர் என்றழைக்கப்படுகின்றார்
கருவறைச் சுவரின் தேவகோட்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் அதிட்டானப் பகுதியில் முப்பட்டைக் குமுத அலங்காரத்திற்கு மேல் சிறுபலகைச் சிற்பங்கள் உள்ளன. காளியமர்த்தனர், கஜசங்காரமூரத்தி, குடையுடன் ரிஷபம், நடன மகளிர், இசைக்கருவி வாசிக்கும் ஒருவன், ஆடல்வல்லான், திரிபுராந்தகர், கஜலட்சுமி, சரசுவதி, அன்னம், அய்யனார், சிங்கம், யாளி, லிங்கோத்பவர் போன்ற அழகிய சிற்பங்கள் சிறுவடிவங்களில் காணப்படுகின்றன
ஆயிரம் ஆண்டுகளாக காவிரி நீரை திருச்சி நகரின் வழியாகக் கொணர்ந்து பல ஏரிகளை நிரப்பி நிற்கின்றது. உய்யகொண்டான் ஆற்று நீரை முறைப்படுத்தி பாசனத்திற்கும் மற்ற நீராதாரங்களுக்கும் பயன்படுத்த ஏரிவாரியத்தையும் அமைத்தான் ராஜராஜ சோழன்.
அந்த ஏரிவாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊரின் சபையோரால் நிர்வகிக்கப் பெற்றது. அந்த அரிய தகவலை கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டைச் சுமந்தவாறு பேரழகோடு திகழும் சிவாலயம் தான் சோழமாதேவி திருக்கயிலாயமுடையார் திருக்கோயிலாகும்.
சோழப்பேரரசர்களின் கல்வெட்டுகளில் இவ்வூர் 'காவிரியின் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டுப் பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம்' எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சோழமாதேவி என்பாள் ராஜராஜசோழனின் தேவியருள் ஒருத்தி.
இவ்வம்மையார் பெயரிலேயே இவ்வூர் இன்றும் விளங்குகின்றது. உய்யகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடகிழக்குப் பகுதியில் அழகிய கற்றளியாக திருக்கயிலாயமுடையார் சிவாலயம் விளங்குகின்றது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்வாலயத்தைப் புதுப்பித்த தமிழக அரசின் தொல்பொருள் துறையினர் பாதுகாக்கப்பெற்ற திருக்கோயிலாக அறிவித்துப் பேணிக்காத்து வருகின்றனர்
சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் இவ்வூரின் பிரம்மஸ்தானத்தில் (மையத்தில்) ராஜராஜசோழன் பெயரால் அம்பலம் ஒன்று இருந்ததாகவும் அங்கு ஊர்மக்களும், சபையோரும் கூடி ஊர் குறித்த முடிவுகளும், சைவ, வைணவ திருக்கோயில் நிர்வாகம் குறித்த முடிவுகளும் எடுத்து செயல்படுத்தினர் என்பகைய என்பதையும் திருக்கோயிலில் திருக்கயிலாயமுடையார் காணப்பெறும் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன
ராஜராஜசோழனின் தேவி ஒருத்தியின் பெயரால் அமைந்த இவ்வூரும், ஸ்ரீகயிலாசம் என்னும் கோயிலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. நீர் மேலாண்மை, ஊர் நிர்வாகம், மக்களின் நலனில் பங்கேற்ற திருக்கோயில்கள், இசை, நாட்டியம் போன்ற கவின் கலைகளை வளர்த்த திறம் எனப் பல்வேறு செய்திகளைச் சுமந்தவாறு ஸ்ரீகையிலாயம் என்னும் கோயில் விளங்குகின்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision