அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கிய என்.ஐ.டி மாணவர்கள் - இரண்டு பேருக்கு திருச்சி என்ஐடியில் இடம்!!
காலத்தினால் அழிக்க முடியாதது கல்வி. கல்வியினை பலருக்கும் பயன்படும் வகையில் பயனுள்ள வகையில் கற்பித்து அரசு பள்ளி மாணவர்களின் கனவையும் நினைவாக செய்துள்ளனர் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள்.
Advertisement
ஜே.இ.இ, நீட் போன்ற தேர்வுகள் ஆரம்பத்தில் வரும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் இதில் வெற்றி பெற முடியுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி ஒன்றிருந்தது. ஆனால் பல தடைகளை அகற்றி தங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாணவமணிகள் இன்றளவும் இருந்துதான் வருகின்றன. சிறந்த வழிகாட்டுதலும், உரிய முயற்சியும் இருந்தால் எவரும் சாதிக்கலாம் என்பதை தேசிய தொழில்நுட்பக் கழக மாணவர்கள் அமைப்பினர், தாங்கள் கற்ற கல்வியினை தங்கள் பின்னால் வரும் அரசுபள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டுமென பாடங்களை கடந்த ஒரு வருடமாக கற்பித்து என்ஐடி-யில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களை வளர்த்தெடுத்துள்ளனர். இவர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் என்பது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் ஒன்று. இதில் வட மாநிலங்களில் இருந்தும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இங்கு வந்து படிப்பார்கள். அந்த வகையில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்த 6 மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக உருவாக்கி, நுழைவுத் தேர்வை எழுத காத்திருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சியை நடத்திவந்தனர். பின்னாட்களில் இது ஒரு பெரிய அமைப்பாக மாறி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து பலரும் அரசு பள்ளி மாணவர்களுக்காக பாடங்களை எடுக்கத் தொடங்கினர். தாங்கள் எப்படி நுழைவுத் தேர்வை எழுதி இதற்குள் வந்தோம் என்பதை அவர்களுக்கு பாடங்கள் மூலமும் கேட்கப்படும் கேள்விகளையும் தொடர்ந்து கற்பித்து வந்தனர்.
இந்த நிலையில் தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள், திருச்சி மாவட்ட நிர்வாகத்தோடு ஒன்றிணைந்து இந்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ நுழைவு தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்கள் 65 பேரை தேர்வு செய்தனர். இதில் 20 பேர் இந்தாண்டு 12ம் வகுப்பு படித்தவர்கள், 45 பேர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக இருந்தனர். இவர்களுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பயிற்சி வகுப்புகள் பள்ளி நாட்கள் போக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என்.ஐ.டி வளாகத்திற்குள் நடைபெற்றது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் திருச்சி சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் வரவைத்து சனிக்கிழமை அவர்களை என்.ஐ.டி வளாகத்திற்குள் விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவர்களை வீட்டிற்கு அனுப்பிய செலவு முதற்கொண்டு மாவட்ட நிர்வாகம் ஏற்றது. அதேபோல என்.ஐ.டி நிர்வாகம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி, பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இலவசமாக அங்கேயே ஏற்பாடு செய்து தந்தது.
இது குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தேசிய தொழில்நுட்ப கழக மாணவர் அருண் பிரசன்னாவிடம் பேசினோம்... "நான் 2ம் ஆண்டு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கும்போது இந்த முயற்சியை முன்னெடுத்தோம். இன்று இது பல நண்பர்கள் ஒத்துழைப்பின் மூலம் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழி வகையையும் பாடத்தினையும் கற்பித்து வந்தோம். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. பின்பு ஊரடங்கு காரணமாக எங்கள் மாணவர்களை ஒரு மூன்று பேர் அமைத்த குழு 13 மணி நேர பயிற்சியை வீட்டில் இருந்தபடியே எந்நேரமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் அவர்களுக்கு புதிதாக நுழைவுத் தேர்வுகளில் எப்படி எழுத வேண்டும் என்ற பயிற்சியை தொடர்ந்து வீட்டில் இருந்தபடி கொடுத்துக் கொண்டிருந்தோம். இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வுகளில் எழுதுவதற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி காத்திருக்கிறோம்" என்றார் அருண் பிரசன்னா.
பயிற்சி வழங்கிய என்.ஐ.டி மாணவர் அருண் பிரசன்னா
சமீபத்தில் வெளிவந்த ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் திருச்சி லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சேதுபதி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புகழரசி ஆகியோருக்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 12ம் வகுப்பில் 20 மாணவர்களுக்கு என்.ஐ.டி மாணவர்கள் பயிற்சி கொடுத்ததில் இரண்டு மாணவர்கள் அவர்கள் கல்லூரியிலேயே படிக்கும் வாய்ப்பினை பெற்று தந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு மற்ற பல்கலைக்கழகங்களிலும் இடம் கிடைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதில் புகழரசி என்ற மாணவி தன்னுடைய அப்பா இல்லாத நிலையில் அம்மா அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த இக்கட்டான சூழ்நிலையிலும் படிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாதனை புரிந்துள்ளார்.இவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த பலரும் முன்வந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர் தேசிய தொழில்நுட்ப கழக பயிற்சி வழங்கிய மாணவர்கள்.
Advertisement
கல்வி என்பதே வியாபாரமாக பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் தான் கற்ற கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்காக செலவழித்து அவர்களையும் தங்களோடு கல்வி கற்க வேண்டும் என நினைத்து பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் நிகரானவர்கள் தான்!