இது நம்ம திருச்சி!! திருச்சி ஸ்பெஷல் ஸ்டோரி:

இது நம்ம திருச்சி!! திருச்சி ஸ்பெஷல் ஸ்டோரி:

காவிரிக்கரையில் அழகாய் மின்னும் நகரம் திருச்சி.
நூற்றுக்கணக்கில் கோயில்களும் உயர்ந்து நிற்கும் கம்பீர கோபுரங்களும் கலை எழில் கொஞ்சும் மண்டபங்கள் வண்ணமிகு திருவிழாக்கள் இந்தியாவில் சுத்தமான நகரங்களில் ஒன்று என திருச்சியில் பல பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.இவற்றுடன் திருச்சியில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களையும் திருச்சியின் அடையாளங்களையும் வழங்கும் தொகுப்பு இதோ!!

Advertisement

கல்லணை:
“நடந்தாய் வாழி காவேரி” என்பது போல கல்லணை உள்ள உலக பழமை வாய்ந்த பெருமை மிக்க ஒரு அணை‌. இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு இருபது நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கல்லணை

மலைக்கோட்டை:
திருச்சி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான்.திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. திருச்சியின் முழு அழகையும் ரசிக்க மலைக்கோட்டை சென்று காணலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மலைக்கோட்டை

திருவரங்கம் :
சுற்றிலும் ஆறுகளால் தீவு போன்ற ஒரு அமைப்பை கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது நம்முடைய திருச்சி திருவரங்கம். 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன.  இந்த கோவில் சோழர்கள், சேராகள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது. திருச்சியிலிருந்து ரயில் மற்றும் பேருந்து மூலமாக செல்லலாம்.

திருவரங்கம்

முக்கொம்பு:
காவிரியின் வெள்ள நீரை கொள்ளிடத்திலும் திருப்பி விடுவதற்காக 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது தான் இந்த முக்கொம்பு மேலணை. திருச்சிக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் கரூர் வழியில் உள்ளது. இதை திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து சுமார் 177 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த முக்கொம்பு மேலணையில் வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியிலிருந்து அரைமணி நேர பயணத்தில் அழகு எழில் கொஞ்சும் பூங்காக்களும் கண்கவரும் இடமாக அமைந்துள்ளது.

முக்கொம்பு

சமயபுரம் மாரியம்மன் கோவில்: திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலுக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

உறையூர் வெக்காளி அம்மன் கோவில்:
சோழர் காலத்திலிருந்து இன்றளவும் நகரின் முக்கியக் கோயிலாக அமைந்துள்ளது வெக்காளியம்மன் கோவில்.சோழர் காலத்து கட்டிடங்களும் வியப்பிலாழ்த்தும் கலைகளும் நிறைந்துள்ளது.

உறையூர் வெக்காளி அம்மன் கோவில்

லூர்து மாதா கோவில்:
திருச்சி மெயின்கார்டுகேட் அருகில் அமைந்துள்ளது லூர்து மாதா கோவில் அண்ணார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கோபுரங்களும், பழங்கால கட்டிட கலையும் பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது லூர்து மாதா கோவில்.

லூர்து மாதா கோவில்

நத்தர்ஷா பள்ளிவாசல்:
திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் வளாகத்தில் நத்தர்ஷா வலி தர்காவும் அமைந்துள்ளது.சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு நத்தர்ஷா வலி எனும் இசுலாமிய சூபி மகான் தனது சுல்தான் பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்து மக்களுக்கு போதனைகள் செய்தார். அவரது போதனை மூலம் பலர் இசுலாம் மதத்தை ஏற்றனர்.அவர் இறந்த பின் அவரை திருச்சியிலே அடக்கம் செய்தனர்.அவரது அடக்கத்தலம் அருகிலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டது.அப்பள்ளிவாசல் நத்தர்ஷா வலி பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.

நத்தர்ஷா பள்ளிவாசல்

இதர இடங்கள்:
வண்ணத்துப்பூச்சி பூங்கா, வயலூர் முருகன் கோவில், BHEL தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே பெட்டி தொழிற்சாலை என திருச்சியின் சுற்றுலா இடங்களுக்கு பஞ்சமில்லை. வருகின்ற விடுமுறை நாட்களில் திருச்சியில் மகிழ்ச்சியோடு பயணித்து செல்லுங்கள்.