பெற்ற மகளை நரபலி கொடுக்க கொடூரமாக கொன்ற தந்தை! பரபரப்பு வாக்குமூலம்!! எஸ்.பி பேட்டி!!!

பெற்ற மகளை நரபலி கொடுக்க கொடூரமாக கொன்ற தந்தை! பரபரப்பு வாக்குமூலம்!! எஸ்.பி பேட்டி!!!

பெற்ற மகளையே நரபலி கொடுக்க துணிந்த தந்தை! நடந்தது என்ன? நடப்பது என்ன? தெளிவான தொகுப்பை புலன் விசாரணையில் விளக்குகிறது திருச்சி விஷன் குழுமம்!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் மகள் வித்தியா(13).அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18 ம் தேதி அந்த ஊரில் உள்ள குடிநீர் ஊற்று குளத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற ச��றுமி வித்தியா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அருகே உள்ள தைல மர காடு ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் ரத்தம் வடிந்த படி மயங்கி கிடந்துள்ளார்.இதனையடுத்து அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி வித்தியா உயிரிழந்தார்.

தைல மர காடு

தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற அவரது தந்தை பன்னீர் முதலில் அளித்த தகவலின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதலில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் தொடங்கினர். ஆனால் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை‌ அதற்கான காயங்கள் ஏதும் இல்லை. கொலை மட்டுமே செய்யப்பட்டுள்ளார் என்று பரிசோதனை முடிவு வந்ததால் போலீசாருக்கு  வேறுவிதமான சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனையடுத்து புதுக்கோட்டை எஸ்பி அருண்சக்தி குமார் தலைமையில் இரண்டு டிஎஸ்பிக்கள் 3 இன்ஸ்பெக்டர்களை உள்ளடக்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

வித்தியா(13).

கடந்த மாதம் 19ம் தேதி முதல் 6 தனிப்படை போலீசாரும் இந்த வழக்கு குறித்து துரித விசாரணை மேற்கொண்டனர்.சிறுமியின் உறவினர்கள், ஊர்க்காரர்கள், அப்பகுதியை சேர்ந்த சந்தேகப்படும் நபர்கள் என பலரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வழக்கில்  முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில்  சிறுமியின் தந்தை பன்னீர்  மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை கந்தர்வகோட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது தனது மகளை தான் தான்  கொன்றேன் என்பதை ஒப்புக்கொண்ட பன்னீர், எதற்காக தன் மகளை கொன்று என்பதை கூற மறுத்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்திய போது பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கையின் காரணமாக தனது மகளைக் கொன்றால் தனக்கு கூடுதல் செல்வம் கிடைக்கும் என்று ஒரு பெண் மந்திரவாதி கூறியதால் நம்பிக்கையில் தனது உறவினர் குமார் என்பவருடன் சேர்ந்து தனது மகளை தானே கொன்றதாக பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இன்று பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை கைது செய்து தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

கொலைகாரன் பன்னீர்

மேலும் தன் சொந்த மகளையே கொன்ற கொலைகாரன் பன்னீர் புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்! "தனக்கு இரண்டு மனைவி இருப்பதாக மூத்த மனைவிக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த மூன்று பெண் குழந்தைகளில் யார் முதலில் வருகிறார்களோ அந்த குழந்தையை நரபலி கொடுப்பதற்காக தீர்மானித்தேன். இதில் நித்யா என்ற மகள் வந்தால் அவளை காட்டிற்கு அழைத்துச் சென்று துண்டால் கழுத்தை நெரித்து எலும்புகளை உடைய செய்தேன். பின்பு உள்ளாடைகள் மற்றும் உடைகளை கழட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன். வீட்டில் சாப்பிட்டுவிட்டு என்னுடைய மனைவி பிள்ளையை காணோம் என போகும் போது தானும் கூடவே சென்று எதுவும் நடக்காதது போல் காட்டினேன் என்றார் கொலைகார பன்னீர்!

வாயை மூடி குரல்வளையை நசுக்கி துண்டை வைத்து குரல்வளையை இறுக்கியுள்ளனர்.

பன்னீரின் முதல் மனைவி இந்திரா தனது மகளைத் தேடி பாப்பான்குளம் கரை வழியாக சென்றபோது முனகல் சத்தம் கேட்டு அங்கு பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் தனது மகளை பார்த்து வீட்டிற்கு அழைத்துச் சென்று உடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தொடர் விசாரணையில் குடும்ப சூழ்நிலை, பிரச்சனை மற்றும் பணத்தேவை காரணமாக தனக்கு பல ஆண்டுகள் பரிச்சயமாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மந்திரவாதி வசந்தி என்பவரின் சொல்படி பூஜை செய்து பெண்ணை பலி கொடுத்தால் அனைத்து கஷ்டங்கள் தீர்ந்து மிக அதிகமாக பணம் வந்து குவியும் என மந்திரசக்தி வரும் என கூறியதை நம்பி கொலை செய்ய திட்டம் தீட்டி, கொலை செய்தால் பிடிபடக்கூடாது என்பதற்காக கடந்த 17ம் தேதி இரவு ஒன்பது மணி அளவில் பிடாரி அம்மன் கோவில் குளத்தின் 300 மீட்டர் தொலைவில் பூஜை செய்துள்ளனர்.

மந்திரவாதி வசந்தி

18ம் தேதி காலை 7 மணிக்கு பன்னீரின் 13 வயது மகளை பிடாரியம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் தூக்கிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் 13 வயது மகளை திட்டமிட்டபடி பன்னீர் அழைத்துச் சென்று மகளின் வாயை மூடி குரல்வளையை நசுக்கி துண்டை வைத்து குரல்வளையை இறுக்கியுள்ளனர். திட்டமிட்டபடி பின்னால் வந்த வசந்தகுமார் மற்றும் மூக்காயி சிறுமியின் கை மற்றும் கால்களை பிடித்து கொண்டு மூச்சுத்திணற செய்து கீழே தள்ளிவிட்டு மயக்கம் அடைந்த உடன் குமார் மற்றும் மூக்கை அனுப்பி வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பன்னீர் தனது மகளை பாலியல் தொந்தரவு செய்து கொன்றது போல உள்ளாடையை கழட்டி விட்டு அணிந்திருந்த ஆடையை அலங்கோலமாக்கிவிட்டு சிறுமி இறந்து விட்டதாக கருதி அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார்

பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி கடந்த 30/05/2020ம் தேதி இரவு நோய்வாய்பட்டு மரணமடைந்துள்ளார்‌. அது சம்பந்தமாக தெம்மாவூர் கிராம நிர்வாக அலுவலர் புகார் மனுவில் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. இன்னிலையில் நேற்று 1ம் தேதி மூக்காயின் உறவினரான குமார் காவல்துறை தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அச்சப்பட்டு தெம்மாவூர் விஏஓ-விடம் சரணடைந்தார். பன்னீரை 1ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்‌.மேற்படி கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், பூஜைக்கு பயன்படுத்திய சேலை, துண்டு மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தனிப்படை பிரிவில் கோபாலச்சந்திரன் காவல் துணை கண்காணிப்பாளர் புதுக்கோட்டை,தமிழ்மாறன் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னமராவதி, ரமேஷ் காவல் துணை கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு புதுக்கோட்டை, சிங்காரவேலு காவல் ஆய்வாளர் கந்தர்வகோட்டை, பரவாசுதேவன் காவல் ஆய்வாளர் நகர காவல் நிலையம், கருணாகரன் காவல் ஆய்வாளர் பொன்னமரவதி காவல் நிலையம், கவிதா AWPS புதுக்கோட்டை, அனிதா ஆரோக்கியமேரி காவல் ஆய்வாளர் மாவட்ட குற்றப்பிரிவு புதுக்கோட்டை மாவட்டம் ஆகிய தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டும் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 40 காவல்துறையினரால் வசமாக சிக்கிக் கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்தி குமார் கூறுகையில்… திட்டமிட்டு கொலை செய்திருப்பதாகவும் அந்த கொலையை வேறுவகையில் பாலியல் வன்புணர்வு என திருப்புவதற்காக பன்னீர் செய்திருக்கிறார் எனவும் கூறுகிறார்.

மூட நம்பிக்கையின் காரணமாக பெற்ற மகளையே தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சவத்தில் ஈடுபட்ட சிறுமியின்  தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் இதில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர். பணத்திற்காக தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பெண் மந்திரவாதி ஒருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் எத்தனை உயிர்கள் இந்த மூடநம்பிக்கையால் போக போகிறதோ தெரியவில்லை!!!!