Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பூவாளூர் அரசு பள்ளியில் அதிநவீன சுகாதார நிலையம்: ஆசிரியர் முயற்சியால் நடந்த அதிசயம்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது .இங்கு லால்குடி,பூவாளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 258 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 11 வருடங்களாக அறிவியல் பட்டதாரியாக பணியாற்றி வருபவர் ஆசிரியர் சதீஷ்குமார்.
தனது பள்ளியின் நிலை அறிந்து பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தன்னார்வலர்களிடமும், நன்கொடையாளர்களிடமும் பல்வேறு நிதிகளை திரட்டி பள்ளியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

ஒருமுறை அவர் பள்ளிக்குச் செல்லும்போது பூவாளூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சில மாணவிகள் அந்த வீட்டின் பெண்ணிடம் கெஞ்சிய படியே பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட சதீஷ்குமார் மாணவிகளிடம் கேட்க “நாப்கின் மாத்தணும் சார்.. அதான் அந்த வீட்டு டாய்லெட்டை பயன்படுத்த அனுமதி கேட்டோம். ஸ்கூல்ல இருக்க டாய்லெட்டுக்கு போனா குமடிட்டு வருது சார்”.. என  மாணவிகள் தெரிவித்தனர்.

கேட்கும் நமக்கே இப்படி இருக்கும்போது அந்த ஆசிரியரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி மாணவிகளின் இடைநிற்றலையும், குறைகளையும் புரிந்துகொண்ட சதீஷ்குமார் அதிநவீன சுகாதார வளாகம் கட்டும் எண்ணம் பிறந்தது.

இச்சமயத்தில்தான் சதீஷ்குமார் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு கோவையில் நடந்த விழாவில் விருது மற்றும் பணப் பரிசு ரூபாய் 50,000 வழங்கப்பட்டது. அதனை அந்த மேடையிலேயே தனது பள்ளியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக தலைமையாசிரியரிடம் வழங்கினார். மேலும் தனது சொந்தப் பணம் 82 ஆயிரத்தை செலவு செய்துள்ளார்.தலைமை ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் சுகாதார வளாகம் கட்ட முறையான அனுமதி பெற்ற அவர் கடந்த ஜனவரியில் இதற்கான கட்டுமான வேலைகளை துவங்கினார். தொடர்ந்து தன்னுடைய முயற்சிகளையும் தன்னார்வலர்கள் நன்கொடையாளர்களிடம் கேட்டு ரூபாய் 10.50 லட்சம் மதிப்பிலான  சுகாதார வளாகத்தை கட்டி முடித்தார்.

இந்த அதி நவீன சுகாதார வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவிகள் உட்பட 13 தனித்தனி கழிவறைகள், தானியங்கி நாப்கின் கருவி, நாக்கின் எரியூட்டும் கருவி, திரவ கிருமி நாசினி, கை கால்களை கழுவும் இடம், கண்ணாடிகள் ஆகியவை உள்ளது. இதேபோல பெண் ஆசிரியர்களுக்கும் தனித்தனி நாலு கழிவறைகளும் நாப்கின் எரியூட்டும் கருவி வாஸ் பேசன், கண்ணாடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சதீஷ்குமார்

இதன் திறப்பு விழா கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர், மற்றும்  தொழிலதிபர்கள் கலந்துகொண்டு இந்த அதிநவீன கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சதீஷ்குமார் ஆசிரியரை மனதார வாழ்த்தி சென்றனர்.மாதா பிதா குரு தெய்வம் என்பது போல ஒரு குரு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மெய்சிலிர்க்க வைத்து விட்டார் சதீஷ்குமார். உண்மையாகவே மாணவிகளில் துயர் துடைத்த சதீஷ்குமார் கிரேட் தான்!

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *