இன்று (18.08.2025), மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் Dry Port – உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தேன்.
உலர் துறைமுகம் என்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்காற்றும் உள்நாட்டு முனையமாகும். கடல் துறைமுகத்திலிருந்து தொலைவில் அமைந்த இது, சரக்குகளைக் கையாளுதல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. சாலை அல்லது இரயில் மூலம் கடல் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டு, சரக்குகளைச் சேமித்து, வரி மற்றும் சுங்க நடைமுறைகளை எளிதாக்குகிறது.
இது ஏற்றுமதி, விவசாயம் மற்றும் வணிகத் துறைகளுக்கு, போக்குவரத்து செலவைக் குறைத்தல், நெரிசலைத் தவிர்த்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துதல், பொருட்களைப் பாதுகாத்தல், பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல நன்மைகளை அளிக்கிறது.
திருச்சியில் உள்ள வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும், இது இன்னும் நிறைவேறவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, பொறியியல் உபகரணங்கள், உதிரி பாகங்கள், உணவுப் பொருட்கள், தினை வகைகள், பிஸ்கட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பலவகைப் பொருட்களின் ஏற்றுமதி மையமாக விளங்குகிறது.
இந்திய தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (2023–24) தரவுகளின்படி, திருச்சி 112.62 மில்லியன் மெட்ரிக் டன் பழங்களையும், 204.96 மில்லியன் மெட்ரிக் டன் காய்கறிகளையும் உற்பத்தி செய்துள்ளது.
இவை திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் மற்றும் பொறியியல் பொருட்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற கடல் துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் 25 டன் கொள்ளளவு கொண்ட 40 முதல் 50 கொள்கலன்கள் திருச்சியிலிருந்து இந்தத் துறைமுகங்களுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், தொழிலதிபர்களும் ஏற்றுமதியாளர்களும் அதிக போக்குவரத்து மற்றும் கையாளுதல் செலவுகளைச் சந்திக்கின்றனர். மேலும், துறைமுகங்களில் நீண்ட நாட்கள் எடுக்கும் நடைமுறைகளால் நேர விரயமும் ஏற்படுகிறது என்ற அனைத்து விவரங்களையும் அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், ஆவணங்களையும் கொள்கலன் பதப்படுத்தலையும் உள்ளூரிலேயே முடிக்க முடியும், இதனால் செலவும் நேரமும் கணிசமாகக் குறையும் என்றும்,
திருச்சியின் ஏற்றுமதி அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், உலர் துறைமுகம் தளவாட உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் முதலீடுகளை ஈர்த்து, நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கும் என வர்த்தக அமைப்புகள் வழங்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டினேன்.
தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்த திருச்சி, சிறந்த விமான, சாலை, இரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், இது, உலர் துறைமுகத்திற்கு ஏற்ற இடமாகும் என்றும், திருப்பூர் அருகே உள்ள உலர் துறைமுகம், திருப்பூர், கோவை உள்ளிட்ட அப்பகுதி ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளது என்பதை உதாரணமாகக் குறிப்பிட்டேன்.
மனப்பாறை அருகே உள்ள SIPCOT தொழிற்பூங்கா அல்லது நெடுஞ்சாலை இணைப்பு கொண்ட பிற இடங்களில் 100 ஏக்கர் நிலத்தை இதற்காக அடையாளம் காண முடியும் என ஏற்றுமதி-இறக்குமதி கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இந்த உலர் துறைமுகம் மாநிலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் ஏற்றுமதி செயல்திறனையும், அந்நியச் செலாவணியையும் உயர்த்தும் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments