திருச்சி ஜி கார்னர் டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் ‘ரோஷன் கன்சல்டன்சி ” என்ற வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் (FRRO) அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.
அப்போது குடிபெயர்வோர் பாதுகாவலர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்…. கம்போடியா, மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளில் பொதுமக்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி செய்வதற்கான நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகிறது. அந்த மோசடி நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோதமாக செயல்படும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் அனுப்புகின்றனர்.
அவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல வேலை என கூறி முதலில் டூரிஸ்ட் விசா மூலம் பேங்க் ஆங் நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அந்த நிறுவனங்கள் செயல்படும் வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களை அந்த நிறுவனத்தில் பணி அமர்த்தி பொதுமக்களுக்கு தொலைபேசியில் அழைத்து மோசடி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அந்த இளைஞர்கள் அந்த வேலையை செய்ய மறுத்தால் அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளை செய்கின்றனர்.
குறிப்பாக அவர்களை அடித்து துன்புறுத்துவது அவர்கள் மீது எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது போன்றவற்றை செய்கின்றனர். அப்படி துன்புறுத்தப்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இந்திய தூதரகம் மூலம் 31 தமிழ்நாட்டு இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தவிர 12 பேர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பாகவே இதுகுறித்து அறிந்து கொண்டு வெளிநாடு செல்லாமல் இருந்து விட்டனர்.
இந்த நிலையில் திருச்சியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஒரு ஏஜென்சி மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு மோசடி செய்யும் நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்புவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் மோசடி நிறுவனத்திற்கு தான் தங்களை அழைத்து செல்கிறார்கள் என தெரிந்து விட்டு வெளிநாடு செல்லவில்லை. மற்ற இரவர் வெவ்வேறு மாநிலங்கள் மூலம் செல்ல புறபட்டனர்.
அவர்களை நாங்கள் கண்டறிந்து இந்த மோசடி வேலை குறித்து எடுத்துக் கூறியதும் அவர்களும் செல்லவில்லை. அந்த தகவலின் அடிப்படையில் தான் திருச்சியில் உள்ள அந்த நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் உடன் இணைந்து நாங்கள் சோதனை செய்து வருகிறோம். ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர் அவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக தான் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்.
அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் ஏஜென்சிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். சென்னையில் ஒரே நாளில் 15 இடங்களில் சோதனை செய்து 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 5 பேரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநகர சிபிசிஐடி ஆய்வாளர் மோகன் தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யார் யாரெல்லாம் உங்கள் மூலமாக வெளிநாட்டில் சைபர் குற்றங்களை செய்ய அனுப்பப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன விரைவில் அவர்களும் மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments