Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஒரு கோடியே 80 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் திருச்சியில் பறிமுதல்

ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு. விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு, அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்படி தடுப்புகாவலில் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 01/01/2025 முதல் 31/07/2025 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய வழக்குகளில், 2,342 டன் பொது விநியோகத் திட்ட அரிசி, 13,720 லிட்டர் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய், 1,725 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசியப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கூறிய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1,84,41,328/- (ஒரு கோடியே என்பத்து நான்கு லட்சத்து நாற்பத்தோராயிரத்து முனூற்று இருபத்து எட்டு) ஆகும். இக்குற்றங்களில் ஈடுபட்ட 6,272 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத்திட்ட பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1.362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் அரசுக்கு அபராதத் தொகை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 70 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *