இந்துக்கள் முழுமுதற் கடவுளாக கருதி வழிபடும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி விழாவாக நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வரும், 7 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி திருவானைக்காவல் மேலக்கொண்டயம்பேட்டையில், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இங்கு, 5000க்கும் மேற்பட்ட களிமண் விநாயகர் சிலைகளும், 1000க்கும் மேற்பட்ட ஊர்வல விநாயகர் சிலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. களிமண் சிலைகள் ஓரடி வரை, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரைக்கும், வர்ணம் தீட்டப்பட்ட களிமண் சிலைகள் ஓரடி வரை, 500 ரூபாய் முதல், 1000 ரூபாய் வரைக்கும், மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊர்வல விநாயகர் சிலைகள் 3 அடி முதல், 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, 7000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அர்த்தநாரி விநாயகர், யானை, குதிரை, மாட்டின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், கோலாட்ட விநாயகர், அசுரனை வதம் செய்யும் விநாயகர், முக்கனி விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள், வகைவகையான வர்ணங்களில் ஜொலிக்கின்றன.

இந்த ஊர்வல விநாயகர் சிலைகள், திருச்சி மட்டுமல்லாது, கரூர், தஞ்சை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகள் அனைத்தும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில், காகித கூழ், கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகவும், வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சிலை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், மேலகொண்டயம்பேட்டையில் இறுதிக்கட்ட விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments