மீண்டும், உயிர்காக்கும் அவசரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக, இன்று (18.08.2025) மாண்புமிகு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை சந்திப்பதற்காக அவருடைய அமைச்சகம் சென்றிருந்தேன். அங்கு அமைச்சர் இல்லாத காரணத்தால், கோரிக்கையின் அவசரம் கருதி அவருடைய தனிச்செயலரை சந்தித்து கீழ்கண்ட இரண்டு கோரிக்கை கடிதத்தை வழங்கினேன்.
அதில், ரஷ்யாவில் போர் முனையில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், கடந்த 16.08.2025 அன்று தனது பெற்றோருக்கும் எனது உதவியாளருக்கும் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, தான் Bakhmut பகுதியில் உள்ளதாகவும், Konstantinovka பகுதியை நோக்கி நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இவை இரண்டும் தீவிர போர் நடவடிக்கைகள் நடைபெறும் ஆபத்தான பகுதிகள். இந்த அதிர்ச்சியூட்டும் தகவல், அவரது பாதுகாப்பு குறித்து ஏற்கனவே இருந்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அவரது குடும்பம், ஒவ்வொரு நாளும் தங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற தீராத துயரத்தில் தவிக்கிறது.
அதேவேளையில், மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த இளைஞரும், முன்னாள் இராணுவ வீரரின் மகனுமான ஓம் சந்திரகாந்த் நேர்க்கர், சமூக ஊடகங்களில் பரவிய பொய்யான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நம்பி, 08.03.2024 அன்று ரஷ்யாவிற்கு பயணித்தார்.
ஆனால், அவர் ஏமாற்றப்பட்டு, Mariupol உள்ள 555 ரஷ்ய இராணுவ மருத்துவமனையில் பணிபுரிவதாக 15.06.2024 அன்று தனது குடும்பத்துடன் இறுதியாகத் தொடர்பு கொண்டு தெரிவித்ததுடன், தன்னை மீட்டு வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கண்ணீருடன் கோரியுள்ளார். அதன் பின்னர், அவருடன் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை.
இந்தியத் தூதரகமும், ரஷ்ய இராணுவமும் அவரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அவரது குடும்பம் ஆழ்ந்த வேதனையில் உள்ளது.
இந்த இரு இந்திய இளைஞர்களின் குடும்பத்தினர்களின் துயரத்திற்கு உரிய பதிலளிக்கும் வகையில், ஒன்றிய அரசும், வெளியுறவு அமைச்சகமும் இவ்விவகாரத்திற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து, அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
என்று எனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
வெளியுறவு அமைச்சகம் இந்த வேண்டுகோளை தீவிரமாக ஏற்று, தாமதமின்றி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments