திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர், அம்மன் நகர், 7-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (64). பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு காட்டூரில் மற்றொரு வீடு உள்ளது. இங்கு வசிப்பதால், அந்த வீட்டில் தினமும் இரவு விளக்கை போட்டுவிட்டு காலையில் வந்து அணைப்பது வழக்கம். மேலும் அந்த வீட்டைச் சுற்றி மதில் சுவர் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், வழக்கம் போல் முன்தினம் இரவு விளக்கை போட்டுவிட்டு சென்றவர், நேற்று காலை ஒன்பதரை மணியளவில் மீண்டும் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் காம்பவுண்ட் கேட் மற்றும் அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் பணி ஓய்வின்போது கிடைத்த இரண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதனை விட அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திருடன் தனது உள்ளாடையை கழற்றி வீட்டின் கேட்டில் தொங்கவிட்டுச் சென்றதுதான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜசேகர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் பனாவத் தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திருடனை தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், திருடன் தனது உள்ளாடையை கேட்டில் தொங்கவிட்டுச் சென்றது போலீசாருக்கு சவால் விடுவது போல் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments