Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு ஊரடங்கில் அசத்திய திருச்சி கலாம் அமைப்பினர்!

“மரம் நடுவோம் மழை பெறுவோம்” இப்போது உள்ள சூழ்நிலையில் மரம் நடுவது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. சமூக அக்கறை என்ற பெயரில் மரங்களை மட்டும் நட்டு வைத்து விட்டு கண்டுகொள்ளாமல் திரியும் பல அமைப்பினருக்கு மத்தியில் திருச்சியை சேர்ந்த கலாம் அமைப்பினர் மரங்களை நடுவது மட்டுமல்லாமல் அதற்கு வேலி அமைத்து அதற்கென ஆட்களையும் நியமித்து பராமரித்து வருகின்றனர். இவர்களைப் பற்றிய தொகுப்பு தான் இது!

Advertisement

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று இணைவதற்காக 4 வருடங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் கலாம் கிரீன் மற்றும் சமூக அறக்கட்டளை. நாளடைவில் பலர் இந்த அமைப்பை விட்டு சென்றாலும் தன்னம்பிக்கையாக சிலர் மட்டும் இந்த அமைப்பை இன்றுவரை வெற்றிகரமாக வழி நடத்தி வருகின்றனர்‌. ஆரம்பத்தில் அங்கு உள்ள பள்ளிகளை சீர் செய்வது, நூலக வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, கிராமங்களுக்கு தேவையானவற்றை செய்வது போன்ற பணிகளை செய்து வந்தனர்.

Advertisement

தற்போது இந்த கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டு 7 மாதங்களைக் கடந்து சென்றிருக்கும் சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

இது குறித்து கலாம் அறக்கட்டளையின் வெங்கடேஸிடம் பேசினோம்… “எங்கள் ஊரில் சாதி பிரச்சனை இருந்ததால் இளைஞர்களை ஒன்று இணைப்பதற்காக நான்கு வருடங்களுக்கு முன்பாக இந்த அமைப்பை தொடங்கினோம். பின் நாட்களில் எங்கள் ஊரில் சிறு சிறு உதவிகளை செய்து வந்தோம். தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை 562 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.

இதில் நாவல் மரம், ஆல மரம், தேக்கு மரம், பூவரசம், இலுப்பை மரம், கருங்காலி மரம், பனை மரம், புங்க மரம், பலா மரம், மாமரம் என பலவகையான மரக்கன்றுகளை கிராமத்தில் நட்டு வைத்துள்ளோம். நான்கு மாதங்களாக இவற்றை தொடர்ந்து கண்காணித்து நட்ட இடத்தில் மரக்கன்றுகள் பட்டுவிட்டால் மீண்டும் அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை வாங்கி வைத்து பராமரித்து வருகிறோம். இதற்கு மூன்று ஆட்களையும் நியமித்து தினமும் தண்ணீர் ஊற்றி வருகிறோம். தற்போது எங்கள் அமைப்பில் குறைந்த அளவு ஆட்கள் இருப்பதால் நீங்களும் சேர்ந்து உதவலாம்” என்கிறார் வெங்கடேஷ்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *