ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதுமாக அகற்றம் – இடிக்க விடமாட்டோம் என கடைக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் தாயார் சன்னதி முன்பாக பத்து கடைகள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2023ஆண்டு இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோன்று வடக்கு அடையவளஞ்சான் வீதியில் கோவில் மதில் சுவரை ஒட்டி கட்டப்பட்டுள்ள எட்டு வீடுகளை அகற்றுவதற்கான நோட்டீசை கடையின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்களிடம் ஏற்கனவே வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லக்ஷ்மணன் தலைமையில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் கடைகளை அகற்றுவதற்கு வந்தனர்.
அப்போது அதிகாரிகள் 2 மணி நேரம் அவகாசம் தருகிறோம் அதற்குள் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். இல்லை என்றால் நாங்கள் அகற்றி விடுவோம் என தெரிவித்ததால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.
இப்போது கடைக்காரர்கள் நாங்கள் இது குறித்து நீதிமன்றம் சென்றுள்ளோம் அதனால் இதனை அகற்றக்கூடாது எனக் கூறினர். அதற்கு கோவில் அதிகாரிகள் நீதிமன்ற தடை உத்தரவு ஏதாவது இருந்தால் எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் கடைகளை அப்புறப்படுத்த மாட்டோம். ஆனால் இந்த கடைகளை அகற்றக் கூறி எங்களிடம் நீதிமன்ற உத்தரவு உள்ளது. மேலும் நாங்கள் பலமுறை உங்களுக்கு கால அவகாசம் வழங்கி விட்டோம். கடந்த ஆண்டு இந்த கடைகளை அகற்ற வந்த போது எழுத்துப்பூர்வமாக கால அவகாசம் கேட்டீர்கள். உங்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்து விட்டோம்.
இன்றுவரை நீங்கள் கடையை காலி செய்யவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவின் படி இந்த கடைகளை நாங்கள் அகற்றுகின்றோம் என கூறினர். பின்னர்
கடையில் இருந்த பொருட்களை கோவில் ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 10 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
கடைக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதுமாக அகற்றம் – கடைக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

Comments