எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள NH-67 பால்பண்ணை–துவாக்குடி பகுதியில் அணுகு சாலை (Service Road) அமைக்க வேண்டும் என்ற 16 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித்தந்திட, ஒன்றிய அரசின் மத்திய நிதி பகிர்மானத்திலிருந்து ஒதுக்கீடு செய்துதர வேண்டி எனது கோரிக்கை கடிதத்துடன் மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நித்தின் ஜெயராம் கட்கரி அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தேன்.
திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகு சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலை மற்றும் அமைக்க வேண்டிய உடனடியான தேவை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு என் கடிதத்தின் வாயிலாக கொண்டு சென்றேன்.
அதில், 16 ஆண்டுகளுக்கு முன் 2009-ஆம் ஆண்டு அணுகு சாலை இல்லாமலேயே இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது என்றும், அன்றைய காலகட்டம் மற்றும் மக்கள் தொகைக்கே விபத்துகள் ஏற்பட்ட இந்த சாலையில், இன்று பதினாறு ஆண்டுகள் கடந்து, திருச்சி மாநகரின் அபரிதமான வளர்ச்சி , மற்றும் இன்றைய மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக்காட்டினேன்.
இந்த NH-67 பகுதி என்பது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற முக்கிய மாவட்டங்களை இணைக்கும் முதன்மை பாதையாக உள்ளதென்றும்,
போக்குவரத்து அதிகளவில் அதிகரித்ததாலும், அணுகு சாலை இல்லாததாலும், இப்பகுதியில் மிக மோசமான அளவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டேன்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2011 முதல் 2025 வரை இந்தப் பகுதியில் நடந்த விபத்துகளில் 417 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், தொடர்ந்து நடைபெறும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என வருத்தம் தெரிவித்தேன்.
இந்த அவசரத் தேவையை உணர்ந்து, தமிழ்நாடு அரசு 29.08.2011 தேதியிட்ட G.O. (Ms) எண் 104, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம், துவாக்குடி முதல் அரியமங்கலம்-பால்பண்ணை வரை மொத்தம் 14.490 கி.மீ. நீளமுள்ள சேவைப் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை எடுத்துரைத்து, இந்த சாலை முழுமையாக அமைக்கப்படஒன்றிய அரசின் ஆதரவு முக்கியமானதாக இருந்தாலும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டத்தை முன்னுரிமையாகக் கருதி ஏற்கனவே ரூ.84.50 கோடியான தனது பங்கை ஒதுக்கியுள்ளதை தெளிவுபடுத்தினேன்.
அத்துடன், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, அமைக்கப்பட வேண்டிய அணுகு சாலையின் அகலம் 60 மீட்டரில் இருந்து 45 மீட்டராக திருத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன என்று தெரிவித்தேன்.
இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.618.20 கோடியாகும். இதில், ரூ.533.70 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளது என்பதை முழு தரவுகளோடு கேட்டுக்கொண்டேன்.
மேற்கண்டவற்றின் அடிப்படையில், அணுகு சாலை திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கு தேவையான ரூ.533.70 கோடியை ஒதுக்கித் தர வேண்டுமென அமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டேன்.
அணுகு சாலை அமைக்கும் பட்சத்தில் இது மேலும் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதோடு, திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments