உலக சைக்கிள் தினம்! திருச்சியில் அதிகாலையிலேயே சைக்கிள் விழிப்புணர்வு!!
பிரதான சாலைகள் இன்று நிதானம் கொண்டுள்ளது…வாகன சத்தங்கள் மறைந்து இன்று வானக ஓசை ஒலிக்கிறது! வண்டிகளின் பயணம் குறைந்து வன விலங்குகளும் சாலையில் வலம் வருகிறது! தொழிற்சாலை கழிவுகளை சுமந்த நீர்நிலைகள் எல்லாம் இன்று தொல்லையின்றி தூய்மையடைந்து வருகிறது… ஒரு பக்கம் நோயை அழிக்க ஊரடங்கு என்றால் மறுபக்கம் மனித வாழ்வியலில் இப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று உலக சைக்கிள் தினத்தையொட்டி திருச்சியில் அதிகாலையிலே சைக்கிள் விழிப்புணர்வு வலம் வரத் தொடங்கினர். இது குறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்.
சில வருடங்களுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள். பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது.
இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது. போதாக்குறைக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் வேறு வதைக்க, பலர் சைக்கிளில் அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு திருச்சி சைக்கிளிங் கிளப் சார்பாக அதிகாலை 5.30 மணிக்கு எல்லாம் உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு வலம் வரத் தொடங்கினர். திருச்சி சைக்கிளிங் கிளப் சார்பாக இன்று காலை திருச்சி நீதிமன்ற சாலையிலிருந்து திண்டுக்கல் ரோடு, பூங்குடி, மணிகண்டம், பஞ்சப்பூர், மன்னார்புரம் வழியாக மீண்டும் நீதிமன்ற சாலையில் வந்து சேர்ந்தனர். சுமார் 30 கிலோ மீட்டர்கள் திருச்சியை சேர்ந்த 23 நபர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திருச்சி சைக்கிளிங் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜாய் கூறுகையில் "சென்னையை அடுத்து திருச்சி தான் அதிகமான சைக்கிள் பயன்படுத்துகின்றன. நம்முடைய இந்த திருச்சி சைக்கிளிங் கிளப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு வருகின்றனர்.இந்த ஊரடங்கு காரணமாக அதிகமான பேர் கலந்து கொள்ள முடியவில்லை.இருந்தாலும் 23 நபர்கள் கலந்து கொண்டு மாஸ்க் அணிந்து உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டோம். சைக்கிள் என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சியும் மனிதன் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்று என்றார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தங்கள் பெற்றோர்கள் விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக விலையுயர்ந்த சைக்கிளை கூட வாங்கி கொடுத்து உடற்பயிற்சியையும் அவர்களுக்கு பாதுகாப்பையும் பெற்றோர்களை உறுதிப்படுத்தலாம்.இனிவரும் காலங்களில் சைக்கிள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்கிறார் திருச்சி சைக்கிளின் கிளப் ஜாய்!
இன்றைய காலகட்டத்தில் அவசர அவசரமாய் அனைவரும் கார் மற்றும் பைக்குகளில் அவசர வாழ்க்கை வாழ்ந்தாலும்,பழமை மாறாமல் உடற்பயிற்சியும் உடலுக்கும் நன்மை தரக்கூடிய சைக்கிளை பயன்படுத்தும் திருச்சி சைக்கிளிங் கிளப்புக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.