அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் திருச்சி உறையூரில் உள்ள ஜி. கே.எம் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், அனைத்திந்திய மாணவர்

பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் க.பாரதி உரையாற்றினார். தீர்மானத்தை மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பா. தினேஷ் முன்மொழிந்தார். தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

மாநில செயற்குழு உறுப்பினர் எம். செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் க. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெய்லானி வரவேற்பு உரை ஆற்றினார். இறுதியாக இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வராஜ் நன்றி கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு!தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு போராடுபவர்களுக்கும், உரிமைகளை பறிப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின் தமிழ்நாட்டின் உரிமைகள், அதிகாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டும், தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றன.

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பவும், ஒன்று சேர விடாமல் தடுக்கவும், சாதி, மத, இனக் கலவரங்களை ஆர்.எஸ்.எஸ். – பாஜக நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராடி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக விளங்கும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், கூட்டாட்சி முறை உள்ளிட்டவை சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மீது பல்வேறு வழிகளில் தொடர் தாக்குதல்களை தொடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாடு கடுமையான பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. ஆண்டுதோறும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜி.எஸ்.டி. வரி பகிர்வு, பேரிடர் நிவாரண நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி போன்றவற்றை பாஜக அரசு தர மறுக்கிறது. மாணவர்களிடத்தில் சாதி, மத வெறுப்புக் கருத்துக்களை விதைக்க பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்.எஸ்.எஸ். – பாஜக நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வலுவான இயக்கமாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற பாசிச பா.ஜ.க முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டின் நலனுக்கும், ஒற்றுமைக்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிரான இந்தக் கூட்டணியை முறியடிக்க வேண்டியது அவசர அவசிய தேவையாகும்.அதேபோல் எந்தவித அரசியல் அனுபவமும் தெளிவான கொள்கை திட்டமும் இல்லாமல் நடிகர். விஜய் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் உள்ள சினிமா மோகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விஜய் முயற்சிக்கிறார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டைப் பாதுகாக்க இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது. மேலும், இக்கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கிறது.



Comments