மாணவியை செக்ஸ்க்கு அழைத்த பெண் விரிவுரையாளர் – மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

திருச்சி வாத்தலை அருகே துடையூரில், சென்னையைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத்தின் கீழ் ‘துணை சுகாதார அறிவியல் மற்றும் செவிலியர் கல்லூரி’ (College of Allied Health Science and Nursing) இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் (B.Sc.) பாடப்பிரிவின் கீழ் கதிரியக்கவியல், மயக்க மருந்து தொழில்நுட்பம், டயாலிசிஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சார்பு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரும், தனிமுறைப் பயிற்சி ஆசிரியருமான (Tutor) சுபாஷினி என்பவர், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதலாண்டு மாணவ, மாணவிகள் 47 பேரை அருகிலுள்ள சிறுகாம்பூர் மற்றும் நெய்வேலி கிராமங்களுக்கு மருத்துவ முகாம் பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுகாம்பூர் பகுதியில் முகாம் நடந்தபோது, சர்க்கரை நோயாளிகளுக்கான ஊசி தீர்ந்துவிட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஆசிரியர் சுபாஷினி, ஏற்கனவே பயன்படுத்திய ஊசியையே மீண்டும் பயன்படுத்துமாறு அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, மதிய உணவிற்காக நெய்வேலி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மாந்தோப்பிற்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அங்கு மதிய உணவை முடித்த பின், ஆசிரியர் சுபாஷினி ஒரு முதலாண்டு மாணவியை மட்டும் தனியாக அழைத்துள்ளார். அச்சமடைந்த மாணவி தனது தோழிகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். எனினும், தோழிகளை அனுப்பி விட்டு மாணவியை மட்டும் கட்டாயப்படுத்தி தன் அருகில் படுக்க வைத்துள்ளார். தொடர்ந்து, மாணவிக்கு சுபாஷினி பாலியல் தீண்டல் கொடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து சக நண்பர்களிடமும், கல்லூரி முதல்வர் ஜூலியிடமும் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த கல்லூரி முதல்வர் ஜூலி, ஆசிரியர் சுபாஷினியின் செயலைக் கண்டித்து அவரைப் பணியிடை நீக்கம் செய்தார்.
ஆனால், இச்செயலால் ஆத்திரமடைந்த கல்லூரித் தலைவர் ரவி, சுபாஷினியை ஏன் வேலைநீக்கம் செய்தாய்? எனக் கேள்வி எழுப்பி, நேர்மையாகச் செயல்பட்ட கல்லூரி முதல்வர் ஜூலியைப் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட சுபாஷினியை மீண்டும் அதே பணியில் அமர்த்தியுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த அநீதியான போக்கைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் மாணவ, மாணவிகள் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜீயபுரம் டி.எஸ்.பி மற்றும் வாத்தலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடினர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துணை ஆட்சியர் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் மாணவர்கள் கூறிய புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 6-ஆம் தேதி ஜீயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் சுபாஷினி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவறு செய்த ஆசிரியருக்கு ஆதரவாகக் கல்லூரித் தலைவர் ரவி தங்களை மிரட்டி வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீதி கேட்டுப் போராடினால் உங்களின் கல்லூரிச் சான்றிதழ்களை எப்படி வாங்குகிறீர்கள் என்று பார்க்கிறேன் எனத் தலைவர் மிரட்டுவதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று கல்லூரி வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மாணவ-மாணவிகள், சுபாஷினியை உடனடியாகக் கைது செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பெண் ஆசிரியரே மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விவகாரமும், அதற்கு ஆதரவாகச் செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் போக்கும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரி மீது தமிழக அரசும், உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் ஏராளமானோர் வேலையை ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது கல்லூரி முதல்வர் ச***** தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
⌈https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments