திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, மதிமுக தொழிற்சங்கப் பிரிவு சார்பில் விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக் கோரியும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
கடந்த 2021-ம் ஆண்டு தேர்வு பெற்ற 15,000 கேங்மேன்களில், 9,000-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 5,493 பேர் தகுதியுடையவர்களாக இருந்தும் பல ஆண்டுகளாகப் பணி கிடைக்காமல் தவித்தனர். இவர்களின் குடும்பத்தினர் பல பொருளாதாரச் சிக்கல்களையும் மன உளைச்சலையும் சந்தித்தனர். இதுகுறித்து தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் பேசியபோது, முதலமைச்சர் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, உடனே பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி, இன்று அந்த 5,493 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம், கந்தர்வகோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மேம்பாடு என நான் வைத்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அரசு வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், செயல்படும் அரசாங்கமாக உள்ளது. செயல்படும் முதலமைச்சராக உள்ள விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு அரசுத் துறைகளில் ஊழலற்ற, தகுதியின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறுவது ஒரு புரட்சிகரமான மாற்றம். மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இது தொடர்ந்தால் வரும் தேர்தல்களில் 35 விழுக்காடு அல்ல, 60 விழுக்காடு பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது மதிமுக எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. தலைவர்கள் இடையிலான கருத்துகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக விசிக-வை மதிக்கிறோம். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய சூழலை திமுக உருவாக்கவில்லை. எங்களது சின்னத்தில் நாங்கள் போட்டியிட முடியவில்லை. இது போன்ற பல சங்கடங்களை அனுபவித்தோம்.

மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசு உரிய விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், சட்டப்பேரவையின் மாண்புகளைக் காக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்.
நாளை 27 ஆம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் முடிவு செய்து கூட்டணி மாறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதிலிருந்து மதிமுக தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக அவருடைய பதில் தெரிவதாக தெரிகிறது. மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வார்களா இல்லை திமுகவில் போட்டியிட்டதால் அவர்கள் என்ன இதில் செய்யப் போகிறார்கள் என்று பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments