திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விரைந்து செயல்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை விரட்டிப் பிடித்து இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டதுடன், பெண்ணின் தந்தை உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில்,மணப்பாறைக்கு வந்த அவர்கள், பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு கார்களில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கடுமையாக எதிர்த்து போராடினார். காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணை காரில் ஏற்றி உறவினர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக அஜித்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, கடத்திச் செல்லப்பட்ட காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் சித்திரைவள்ளியை பாதுகாப்பாக மீட்ட போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பெண்ணின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணத்தை ஏற்க மறுத்ததால் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் முயற்சி சம்பவம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments