திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி – வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி வட்டாட்சியரிடம் மனு.வாழை, வெற்றிலை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் காய்ந்து கருகும் அபாயம் -அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர போராட்டம் என எச்சரிக்கை.அனுபவம் அற்ற தமிழக அரசினால் டெல்டா விவசாயிகள் பாதிப்பு என குற்றச்சாட்டு.திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று தொட்டியம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொட்டியத்தில், தொட்டிய வட்ட காவிரி நீர் பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் சார்பில் இன்று சுமார் 1000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.கோரிக்கைகளை முழங்கியவாறே பேரணியாக நடந்து சென்று, தொட்டியம் வட்டாட்சியர் லாஜபதிராவிடம்
தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து விவசாயிகள் கூறியதாவது:தொட்டியம் தாலுகா பகுதியில் பாசனம் வழங்கி வரும் வடகரை வாய்க்காலில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வராததால், இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

பல இடங்களில் விவசாயிகள் போர்வெல் அமைத்து ஆயில் மோட்டார் மூலம் பாசனம் செய்ய முயன்றாலும், போதிய தண்ணீர் கிடைக்காமல் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் பெற முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், மாயனூர் கதவணையில் உள்ள நீரினை வடகரை வாய்க்காலில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருவேளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க இயலாது என்றால், காவிரி பாசனப் பகுதியை வறட்சிப் பகுதியாக அறிவித்து, அதற்கான மானியத்தையும், காய்ந்து வரும் பயிர்களுக்கான இழப்பீட்டையும் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

மேட்டூர் அணையில் 40 டி.எம்.சி நீர் இருப்புள்ள நிலையில், காவிரியில் 3,000 கனஅடி நீர் திறப்பதால் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. மாயனூர் கதவணையில் 4 மீட்டர், 1 டி.எம்.சி தண்ணீர் உள்ளதால், அதிலிருந்து திறந்தால் கூட வடகரை வாய்க்காலுக்கு தாராளமாக தண்ணீர் வழங்க முடியும். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி காய்ந்து வரும் வாழை மற்றும் ஆண்டுப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும். வடகரை வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். வாழையை வெறும் விவசாயப் பயிராகக் கருதாமல், விவசாயிகளின் உயிராகக் கருத வேண்டும். பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு உயிர் என்பதை அரசு உணர வேண்டும். ஆண்டு பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்.அனுபவமற்ற அரசினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்

காலங்களில் விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து விவசாயிகளின் நலனைக் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றால் அவர் போனை எடுப்பதில்லை என்றும், மாறாக அவருடைய தனி உதவியாளர்கள் (P.A) மட்டுமே போனை எடுப்பதாகவும், அவர் 6 பி.ஏ-க்களை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட விவசாயிகள், தங்களால் தங்களது தொகுதி எம்.எல்.ஏ-விடமே நேரடியாகப் பேச முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
விவசாயிகளின் இந்த திடீர் பேரணியால் தொட்டியம் நகரில் பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தொட்டியம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments