இந்திய விடுதலைப் போரில் சுதேசி இயக்கத்தைத் தொடங்கி, தனது சொத்து சுகங்களை இழந்து நாட்டுக்காகப் பாடுபட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரை தனியார் நகைச்சுவை தொலைக்காட்சி ஒன்றில் அவதூறாகப் பேசியதைக் கண்டிக்காத அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தலைவன் வ.உ.சி. நலப்பேரவை மாநிலத் தலைவர் கனகவேல் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆங்கிலேயர்களை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சுதேசி கப்பல் இயக்கத்தைத் தொடங்கிய வ.உ.சி போன்ற மாபெரும் தலைவர்களின் வரலாற்றை இன்றைய கல்விமுறையும் அரசியலும் இளைய தலைமுறைக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை என்றும், சினிமா நடிகர்களின் வரலாற்றைக் காட்டும் பள்ளிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமான தியாகிகளை மறந்து வருகின்றன என்றும் சாடினார்.
சமீபத்தில் தனியார் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வ.உ.சிக்கு ‘செக்கிழுத்த செம்மல்’ என்ற பெயர் வந்தது குறித்துப் பங்கேற்பாளர்கள் பேசிய பேச்சு கடும் அநாகரிகத்தின் உச்சமாக இருந்தபோதிலும், தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த ஒரு தலைவரை கீழ்த்தரமாகப் பேசியதை தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற வ.உ.சி. நலப்பேரவைதான் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த நிலையில், வ.உ.சி. அவமதிக்கப்பட்டதை தவெக உள்ளிட்ட எந்தக் கட்சியும் கண்டிக்காதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகள் செவிமடுக்காததால் வ.உ.சி. நலப்பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிட்ட கனகவேல் பாண்டியன், அந்த தீர்ப்பின் விவரங்களை விவரித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதே தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் பார்க்கும் ‘பீக் ஹவர்’ நேரத்தில் எந்தவித விளம்பரமும் இன்றி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், வ.உ.சி. மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த 3,000 புத்தகங்களை சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், நூலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு 8 வார காலத்திற்குள் வழங்க வேண்டும், வ.உ.சி. பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை முன்னிட்டு மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்புடன் சி.எஸ்.ஆர். (CSR) நிதியிலிருந்து வ.உ.சி. குறித்த மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளை நடத்தி அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறாமல் இருக்க பிரத்யேக எடிட்டோரியல் குழுவை அமைத்துத் தணிக்கை செய்ய வேண்டும் மற்றும் வ.உ.சி. மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த ஆவணப்படங்களை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் ஒளிபரப்ப வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு மக்கள் தலைவன் வ.உ.சி. நலப்பேரவை சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்துப் பேசுகையில், தவெக வெற்றிபெற வ.உ.சி. பேரவைதான் களத்தில் நின்று உழைத்ததாகவும், தேசத் தலைவர்கள் அவமதிக்கப்படும்போது குரல் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்பதால் இதுகுறித்து தங்கள் தலைமை நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழுவைக் கூட்டி தவெக மற்றும் பிற கட்சிகளுக்கான ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநில பொது செயலாளர் ராமச்சந்திர குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் பிள்ளை, மாநில வழக்கறிஞர் அணி தலைவர் தியாகராஜன் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments